பேசும் ஆற்றலினாலும் பகுத்தறிவு என்னும் பெருஞ் செல்வத்தினாலும் ஏனைய விலங்குகளிடமிருந்து மனிதன் பிரித்தறியப்படுகின்றான். நல்லவற்றை சிந்தித்து செய்தாலும், ஒரு சில சிந்திப்புக்கள் தவறாகி விடுகின்றன. இது மனித மாண்பினை கேள்விக்குரியதாக்கி விடுகின்றது. நல்லவற்றைப் பேசி ,நல்ல விடயங்களை செயற்படுத்திய பலர் எம்மவர்களின் வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்.
மனிதனுடைய வாழ்வியலில் ஒவ்வொரு பாகத்திற்கும் குறிப்பிட்ட அளவு முக்கியத்துவமும், பெருமைப்படுத்தலும் வழங்கவேண்டியது தேவையே. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென்றனர் எம் முன்னோர்.
மனிதனை பொறுத்தவரையில்செய்யும் தொழில் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பொழுது போக்குகளும் இன்றியமையாதவை.
முன்பெல்லாம் பொழுது போக்குகள் குறைவு.ஆனால் இப்போது அவையெல்லாம் பல்கிப்பெருகி விட்டன.
திரைப்படம் , நாயகன், நாயகி, நகைச்சுவையாளன், இசையமைப்பாளர் அவற்றின் ரசிகர்கள் விருப்பங்கள் வகை தொகையாகின்றன.
திரைப்படங்கள் நல்லதொரு வழிகாட்டலினை, சமூகக் கருத்துக்களை, வாழ்வியல் அம்சங்களை போத்தித்திருப்பதனையும், போதித்துக்கொண்டிருப்பதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தோனி, ராம், பிரண்ட்ஸ் எனப்பல திரைக்காவியங்களை வரையறுக்க முடியும். சினிமா சமூகப்பாங்கான வருமானமீட்டும் தொழில் துறையாகவும் மாறியுள்ளது.
ஒரு விடயத்தினை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும் நானும் சினிமாவின் ரசிகன். சினிமாவிற்கு எதிரானவன் அல்ல. ஆனால் சினிமாவில் நடக்கும் ஒருசில மூடத்தனமான விடயங்கள் களையப்படுவதனையே விரும்புகின்றேன்.அவற்றினையும் பட்டியலிடுகின்றேன்.
காலம் காலமாக திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை யாழ்ப்பாணத் திரைகளிலும் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் எம் வாழ்வியலுக்கு பாடம் சொல்லித்தரும் திரைப் படங்கள் வரவேற்பு பெறுவதில்லை. காரணம் உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை. எதுவித அர்த்தமுமில்லாத விடயங்கள் பிரபலமடைவது பற்றி நாங்கள் ஆராய்வதில் அர்த்தமுமில்லை.
அதனை விட தமது நாயகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் கூடுகின்ற (பாமர) ரசிகர்களின் //மன்னிக்க வேண்டும்// மூடத்தனமான செயல்களிலீடுபடுவது வேதனையினைத் தருகின்றது.
நாயகன் தீக்குளிக்கின்றான் என்று ரசிகர்கள் ஏமார்ந்து தீக்குளித்து உயிரிழப்பதும், நாயகன் காப்பாற்றுவான் என்றெண்ணி தூக்கில் தொங்குவதும் எம்மவர்களை அறிவிலிகளாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
குறித்த நாயகர்களிற்கு 30அடி, 40அடி கட்டவுட்கள் செய்வதும் அவற்றிற்கு பால் ஊற்றுவதும் தேங்காய் உடைப்பதும் எமக்கு என்ன பலாபலன்களைத் தந்து விடப்போகின்றது?
அப்படியானால் எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக நாம் நம்பும் இறைவனுக்கும் இந்த மானுடர்களிற்கும் என்ன வித்தியாசம்?
நான் உங்களிடம் விடயம் ஒன்றினைக் கேட்க விரும்புகின்றேன்.
எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக நாம் நம்பும் இறைவனுக்கு நீங்களெல்லாம் பால் ஊற்றியதும், தேங்காய் உடைத்ததும் உண்டா?
நூற்றுக் கணக்கான லீற்றர் பாலினை கட்டவுட்களிற்கு ஊற்றி என்ன பலன்? 3 மணி நேர மகிழ்விற்காக என்னென்னவை எல்லாம் செய்தீர்கள் என்று உங்களிற்கு அதன் பிற்பாடு புரிகின்றதா?
தேங்காயொன்றின் விலை என்ன? பால் ஒரு லீற்றரின் விலை என்ன? நீங்கள் கட்டவுட்களிற்கும், பாலிற்கும், வெடிகளுக்கும், தேங்காய்க்கும் செலவளித்த மொத்த தொகையினை யாராவது உங்கள் அபிமான நாயகர்கள் யுத்தத்தினால் நிர்க்கதியாகியிருந்த போது வழங்கினார்களா?
சிந்தியுங்கள். நான் சினிமாவை ரசிக்க வேண்டாம் எனவில்லை. அளவோடு உங்கள் உணர்வுகளை பிரசவியுங்கள். அறிவிலித் தனமான வேலைகளை அறவே நிறுத்துங்கள்.
அதற்காக
கட்டவுட்டிற்கும் நிலத்திற்கு ஊற்றி வீணாக்கிய பாலினை போசாக்கு குறைந்த குழந்தைகளுக்கும், வறுமையால் பசியில் வாடுபவர்களுக்கும் கொடுத்து உங்கள் உணர்வுகளினை ஆக்க பூர்வமான வழிகளில் வெளிப்படுத்துங்கள். அது புண்ணியமாகக் கூடும். மற்றொரு விடயம் உங்கள் குழந்தை. நீங்கள் பெற்ற குழந்தை பாலுக்காக அழுத போது வராத உணர்வு இப்போது ஏன் பீறிட்டெழுந்தது? உங்கள் குழந்தை பாலுக்காக அழுததை ஏன் மறந்தீர்கள்?
நீங்கள் ஒரு சில விநாடிக் கூத்திற்காக உடைத்த தேங்காய்களை உணவில்லாது ஏங்குபவர்களிடம் கொடுங்கள். அது அவர்களுக்கு நீங்கள் செய்யும் மிகபெரும் உபகாரமாக அமையக்கூடும்.
நாங்கள் காலங்காலமாக வெடியொலிகளை கேட்டு அலுத்து விட்டதே. வெறுப்பேத்தாதீர்கள். அவற்றினை மறக்க விடுங்கள்.

வரிக்கொரு முறை ஈழம் சம்பந்தப்பட்ட வசனங்கள் போடவிட்டால் திரைப்படம் வெற்றியடையாது என்றுணர்ந்து கதை வசனம் எழுதும் நீங்கள் ஈழத்தமிழருக்காக என்ன செய்தீர்கள்?
இவற்றினை விட எங்கள் பிரதேசத்திலே (இலங்கையிலே) வந்து நிகழ்ச்சி செய்ய முடியாது. ஆனால் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து ரசிக்க வேண்டும். அப்படியானால் எம்மவர்கள் ஏமாளிகளாகவே இருப்பதனைத்தான் அவர்களும் விரும்புகின்றார்களா?
மூடத்தனமான வேலைகள் தொடர்கின்ற போது ஏமாற்றுபவர்களும் தங்களது வித்தைகளை தொடர்வர். அளவோடு ரசியுங்கள், அறிவிலித்தனமான செயல்களைத் தவிருங்கள்…


No comments:
Post a Comment