Wednesday, December 14, 2011

நட்பு!




ஊரின் விளிம்பில்
அதோ நானும் என் நண்பனும்
அழுதுகொண்டே சந்தித்த முதல்
பள்ளி

பள்ளிக்குப் போகமாட்டேன்
என்று கட்டிப்பிடித்துக் கொண்ட
மரம்

 

ஒன்றாய் உட்கார்ந்து
அரட்டை போட்ட மரத்தடிப்
பாறை

அடிவாங்கி
முழங்காலின் நின்ற
வகுப்பறை வாசல்

கரஇடி வாங்கி
மகிழ்ச்சியாய் நின்ற
மேடை

பாடசாலை கீதம்
தினமொலிக்கும்
ஸ்பீக்கர்

கரண்ட் இல்லாத நேரத்தில்
பாவிக்கப்படும்
மணி

நண்பனுக்காக
சண்டை போட்ட
ரகசிய இடம்

சமயத்தில்
தப்பியோட உதவிய
கழிவுக் கால்வாய்

மாணவத்தலைவனால்
பெப்சி கிறிக்கெட் கார்ட்
பறிக்கப்பட்ட
இடம்

முடிவெட்டாமல்
வந்து அடி வாங்கிய
இடம்

நீயும் பெயிலா
நானும் பெயில்டா
என்று அகமகிழ்ந்த
இடம்

வாசல் கேற்
பஸ் தரிப்பு நோக்கி
நீளும் நெடும் பாதை
பிரதான வீதி

பஸ் தரிப்பிடம்
பெண்கள் பாடசாலை
மாங்காய்க் கடை
ஐஸ் விக்கும் சைக்கிள்

ஐஸ் பால் கடை
கொய்யாப் பழக்கடை
தினம் செல்லும்
சாப்பாட்டுக் கடை

அங்கும் நட்பு
இங்கும் நட்பு
அதிலும் நட்பு
இதிலும் நட்பு

அவற்றில் நட்பு
இவற்றில் நட்பு

பக்கத்தில் நட்பு
தற்போது என் எதிரிலும்
புன்னகைத்தபடி
நட்பு!.....

Monday, December 12, 2011

பாரதி
பாரதி கண்ட புதுமைப்பெண்,பாரதியின் கனவு,பாரதியின் கவிதைகள் என மூச்சுக்கு ஒரு முறை பாரதி பற்றி பேசுகிறோம் .ஆனால் பெரும்பாலும் பாரதி கூறியதில் ஒரு பகுதியை தான் எடுத்துக்கொள்கிறோம் .அது எம் மனோநிலையின் வெளிப்பாடோ தெரியவில்லை .பாரதியின் நினைவு தினத்தில் ,அவன் எண்ணங்கள் இறக்காத தினத்தில் இதை பதிகிறேன் .

பாரதியை ஒரு சாதாரண நுகர் பொருள் கலாச்சாரத்தில் சிக்கிய மனிதர்கள் வட்டத்துக்குள் சேர்க்க முடியாது .தன் குடும்பம் தன் வட்டம் என்று நினைக்காத "வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்ற வரிகளே பாரதியின் எண்ணத்தின் உயர்வை சொல்லும் . நேரடியாக விடயத்திற்கு வருகிறேன் .
எப்போதும் நாம் பாரதி கூறியதில் பாதியை தான் நினைவில் வைத்திருக்கிறோம் .சில கருத்துகளை அப்படியே எம் தன்மைக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம் .பாரதி கண்ட புதுமை பெண்களை உதாரணமாக  சொல்லலாம் . 

முக்கியமாக "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று நாம் வெறுமனே கூறுவதுண்டு .பாரதி கூறியது இப்படி சொல்ல கூடாது என்றே ! 


புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
  மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
      மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! 
     இந்த வசையெனக் கெய்திட லாமோ? என்று முடித்திருப்பார் .

அதற்கான வழியையும் முன் வைத்தான் .நாம் அதனை பின்பற்றுகிறோமா!
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!


எட்டு திக்கும் சென்றோம் இங்கே கொண்டு வந்து சேர்த்தோமா என்பதே கேள்வி ? அங்கேயே சென்று இருந்துவிட சொல்லவில்லை பாரதி .


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
 இனிதாவது எங்கும் காணோம்; "

இதனை கூறிவிட்டு நாம் நிறுத்தி விடுவோம் . பாரதி வெறுமனே மொழியின் புகழ் பாடிவிட்டு நிறுத்திவிடவில்லை . அவன் புரட்சிக்கவி . சாதாரண கவிஞர்கள் போல் அல்லாததால தான் இன்னமும் உயிர் வாழ்கிறான் .



பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும் 
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு       வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம்      பரவும்வகை செய்தல் வேண்டும்.

மொழியின் அழகை உணர்ந்தவர் அதன் தொடர்ச்சியை விரும்பியவர் .அதனோடு நிறுத்திவிடவில்லை .அதற்கு வழியும் சொல்லி இருக்கிறார் . மேலே உள்ள வரிகளை கவனிக்கும் பலர் அவர் காட்டிய வழியில் பயனிப்பதில்லை என்பது நிதர்சனம் .

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்  
 தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்   
 சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;   
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

நாம் வெளிநாட்டவரை ,வெளிநாட்டு மொழிகளை வணக்கம் செய்கிறோமே  தவிர அவர்கள் எம் மொழியை எம்மை பின்பற்றவேண்டும் என்று நினைப்பதில்லை .

இப்படி செய்தால் யார் யார் எல்லாம் விழித்து கொள்வர் என்றும் கூறுகின்றார்  .

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
      விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்   
 இங்கமரர் சிறப்புக் கண்டார்.

என்னை கவலைகள் தின்னத்தகாதேன்று நின்னை சரணடைந்தேன் என்று பாரதி கூறியது .பணம் என்ற இந்த அற்ப துன்பங்களால் மக்களுக்கும் ,நாட்டுக்கும் ,மொழிக்கும் தான் செய்ய இருந்த செயல் முடியாமல் போய் விடுமோ என்ற கவலையில் தான் பாடினான் . இந்த வரிகளை நாம் எமது அற்ப  துன்பங்களுக்கே பயன்படுத்துகிறோம் .

பாரதியின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுப்போம் ! 

பிரபல்யமான பதிவுகள்