Sunday, May 18, 2014

பல தடைகளை தாண்டி இரத்தம் சிந்தியவர்களுக்காக இரத்த தானம் 18.05.2014

அழிக்கப்பட்ட எம்மவர்களின் நினைவாக ஒவ்வொரு மே 18ம் நாம் இரத்ததானம் செய்வது வழமை.
இன்று காலையில் நண்பர்களும் நானுமாக யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்றோம்.
இரத்த வங்கிப் பிரிவிலுள்ள ஆசனங்கள் அனைத்தும் திட்டமிட்டு இராணுவத்தாலும், சிங்களப் புலனாய்வாளர்களாலும் நிரப்பட்டிருந்தன. அங்கு வருகின்றவர்கள், போகின்றவர்களைப் படமெடுக்க பிரத்தியேக சிங்கள புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
உள்ளே சென்று இரத்த வங்கிக்கு பொறுப்பான தமிழ் பெண் வைத்தியரிடம் கேட்டால் அனுராதபுரத்தில் புத்தன் நாளுக்காய் சிங்களவர்கள் கொடுத்த இரத்தம் இருக்கின்றது. நீங்கள் தேவையில்லை போய்வாருங்கள் என்றார்.
யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு எதற்காக அனுராதபுரத்தில் இரத்தம் சேகரித்தீர்கள்? என்ற போது வாயடைத்தார் அந்த பெண் வைத்தியர்.
அத்துடன் உங்களிடம் இரத்தம் எடுத்தால் வெட்டிப் புதைக்கத்தான் வேண்டும் என்றார்.
கேட்டோம் என்ன முகத்தோடு இனி யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரத்தம் தேவையென கேட்கப்போகின்றீர்கள் என்று?
சரி, ஒரு பைன் இரத்தம் கொடுப்பதற்கு இவ்வளவு சிக்கல்களா? நம் உரிமையல்லவா?
உரிமையினைப் பெறுவதற்கு சிறிது கஷ்டப்பட்டால் போதுமே என்பதை இன்று தான் உணர்ந்து கொண்டோம்.
தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு நண்பர்கள் மூலமாய் தொடர்பு கொண்டு அங்கே சென்றபோது எமக்கே ஆச்சரியமளித்தது,
இராணுவக் கெடுபிடிகள், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களையும் தாண்டி பெண்கள் பலரும் குருதிக் கொடை செய்து கொண்டிருந்தனர்.
மோட்டார் வண்டிகளின் இலக்கத்தகடுகள் படம் எடுக்கப்பட்டன, கூடவே அதில் செல்பவர்கள் வீடியோ எடுக்கப்பட்டனர்.
இருந்தும் வழமையாய் மே 18ல் செய்கின்ற குருதிக் கொடை ஆற்றியதில் எவ்வளவு திருப்தி?
இராணுவம். நாம் வந்து பாதையினை மறித்து இன்று தடை என்று சொல்லவும், இரத்தவங்கியில் குருதிக் கொடையையும், ஆலயங்களில் திருவிழாக்களையும், மக்கள் நடமாட்டத்தையும் தடுக்க முடியுமானால் எம் உறவுகளிற்காய் நாம் சிலவற்றை ஏன் ஆற்ற முடியாது.
அடக்குமுறைகள் உடையத்தான் வேண்டும். நம்முடைய காவல் தெய்வங்களின் தேவை பலருக்கு இங்கே தான் தேவைப்பட்டிருக்கலாம்.
கொல்லப்பட்டவர்களிற்கு நாங்கள் உயிரூட்ட முயற்சிக்கவிலை, அவர்களின் ஆத்மா சாந்திக்காகவே பிரார்த்திக்கின்றோம்,
நீங்கள் மாத்தறையில் கூத்தாட முடியுமாக இருந்தால் நாங்கள் எம்மவர்களை நினைக்கவும் அஞ்சலிக்கவும் முடியும் தானே? பிறகென்ன?
ஆனைக்கொரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வராமலா போகும்?
             


பிரபல்யமான பதிவுகள்