Sunday, March 10, 2013

நீலம் சிவப்பு... “இந்துக்களின் போர்” தெரிந்தவையும் அறிந்தவையும் ஓர் தொகுப்பு.

சிறியதொரு இடைவெளிக்குப் பிற்பாடு பதிவொன்றோடு வருகின்றேன். இந்துக்களின் போர் சம்பந்தமாக நான் அனுபவித்தவைகள், பார்த்தவைகள், அறிந்தவைகளை தொகுத்திருக்கின்றேன். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். வரலாறுகளை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியே இது.
நூற்றாணுகளாக கல்வி, கலை பண்பாட்டு வரலாற்றைக் கொண்டிருந்தாலும் விளையாட்டில் அந்தக் குறை இல்லாமல் இல்லை. எல்லாவற்றையும் தீர்த்து இந்துப்பாரம்பரியத்தை சீராக முன்னெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ”இந்துக்களின் போர்” இன்று ஆறாவது வருடமாக இடம்பெறுகின்றது.
      
ஆரம்பத்தில் 2 நாட்களைக் கொட “டெஸ்ட்” போட்டியும் பின்பாக மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர்கள் கொண்ட ”ஒரு நாள்” போட்டியும் இடம்பெறுவது வழமை.
இன்று இந்துக்களின் போர் “வடக்கு-தெற்கு” சமராகவும் வளர்ச்சி கண்டிருக்கின்றது.
வீரர்களின் திறமைகளிற்கு புடம் போடவும், திறமைகளை பல்துறை சார்ந்ததாக வளர்ப்பதற்கும் கல்லூரிகளிற்கிடையிலான நட்புறவை வளர்ப்பதற்கும் இப்போட்டிகள் வழிசமைக்கலாயின.
     
களை கட்டும் கொண்டாட்டங்கள் இரு அணியின் ஆதரவாளர்களும் முட்டி மோதுமளவிற்கு கூட இடம்பெறும். போட்டிகளிற்கு சுமார் ஓரிரு வாரத்திற்கு முன்பே “cap collection” ஆரம்பமாகி விடும். மாணவர்கள் தங்களது பருவத்தை கொண்டாட்டுவதற்கும் இக்காலப் பகுதி சிறப்பானது.
பல பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் தலை நகரிலிருந்தும், கடல் கடந்த பிரதேசங்களிலிருந்தும் வருமளவிற்கு இவ் “இந்துக்களின் போர்” அனைவரையும் ஒருங்கிணைக்கின்றது.
           
2008 முதல் இன்று வரை கொக்குவில் இந்து 2011ல் பெற்ற ஒரு வெற்றி மட்டுமே முடிவாக இருக்கின்றது. தொடர்ச்சியாக இரு அணிகளும் மாறி மாறி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதோடு முடிவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து வரும் காலங்களில் “வடக்கின் போர்” போன்று மூன்று நாட்களைக் கொண்டதாக போட்டிகள் மாற்றம் பெறின் முடிவுகளையும் சூடு சுவாரஸ்யங்களையும் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம்.
கடந்து வந்த அணித்தலைவர்கள் போட்டி முடிவுகள் ஸ்கோர் என்பன ஒரே பார்வையில்.

”இந்துக்களின் போரில்” இதுவரை இரண்டு சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. கொக்குவில் இந்துவின் பங்குஜனினாலும் யாழ் இந்துவின் ஜஸ்மினனாலும் எழுதப்பட்ட இவ் வரலாறு இன்னும் தொடர்ந்து மாற்றம் பெற வேண்டும்.
ஆனால் 9 அரைச்சதங்கள் விளாசப்பட்டுள்ளன.
யாழ் இந்து சார்பில் நிரூஜன், ஜஸ்மினன், கிருஷோபன், மதுசன் ஆகியோரும், கொக்குவில் இந்து சார்பில் பங்குஜன் 2 அரைச்சதங்களையும் , வல்லவக் குமரன், உத்தமக்குமரன், கார்த்திக், ராகுலன், ஜனுதாஸ் ஆகியோர் தலா ஒரு அரைச்சதங்களையும் அடித்துள்ளனர்.
நல்லதொரு முடிவை 6வது இந்துக்களின் போரில் எதிர்பார்த்து....

Saturday, January 26, 2013

ரிஷானா, ஷிராணி வழியாக நம்ம கமலும்....


முதலில் முஸ்லிம்களில் ஆரம்பித்து, சிங்களவர்களின் மீது கூடப் பாய்ந்து இறுதியாக தமிழனின் மேல் வந்திருக்கின்றது ஆட்சியாளர்களின் செங்கோல்(?) ரிஷானா நபீக், தொடர்ச்சியாக ஷிராணி பண்டார நாயக்கா வழியாக கமலின் விஸ்வரூபமும் பழிவாங்கப்பட்டுள்ளது. இப்பதிவு யாரையும் புண்படுத்தும் விதமாக இல்லை. ஆனால் சில விடயங்களைப் பகிரவேண்டும் என்னுள்ளே சில தெளிவுகள் வரவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தப் பதிவை இடுகையிடுகின்றேன்.

ரிஷானா
கலங்கலாகத் தெரிகிறது அந்தக் காணொளி. வெண்ணிற பர்தா அணிந்த அந்தப் பெண் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாள். அருகே  சவுதி ஷேக் உடையணிந்த இரண்டு பேர் நிற்கிறார்கள். அவர்களைச் சுற்றி சீருடை அணிந்த, காவலர்கள் போல தோற்றமளிக்கும் சிலர்  அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். அருகில் வாகனங்கள் மற்றும் பல மனிதர்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஷேக் உடையணிந்த மனிதர்களில் ஒருவர் இடையிடையே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணின் காதில் எதையோ சொல்லியவாறே இருக்கிறார். மெல்லக் காட்சிகள் நகர்கின்றன. என்ன நடந்தது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்ததால் உள்ளத்தின் ஆழத்தில் இயலாமையும், ஆத்திரமும் பிசைய, பின்னணியில் வழிந்த இசை இன்னதென்று தெரியாத ஒரு அதீத பயத்தைக் கிளப்புகிறது.
                   
சற்று நேரத்தில் அந்த இருவரில் ஒருவர் , மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் கழுத்தைத் தொட்டு குனிய வைக்கிறார்,  பின் அப்பெண்ணின் தோளில் தட்டி விட்டு நகர்கிறார். வேளை நெருங்கி விட்டது என்பதை அப்பெண் உணர்ந்திருப்பாளோ? அந்த நேரம் அவளது மனதில் என்ன நினைத்திருப்பாள் என்று நமது மனம் பரிதவிக்கிறது.
அந்தப் பெண்ணிடமிருந்து நகர்பவர் தனது இடையிலிருந்து நீண்ட வாள் ஒன்றை உருவியெடுக்கிறார். அப்போது மட்டுமல்ல ஆரம்பம் முதலே அந்தப் பெண் அமைதியாய், எந்தச் சலனமும் இன்றி, எந்த எதிர்ப்பும் இன்றித் தலை கவிழ்ந்தபடியேதான் இருக்கிறாள். வெயிலில் பளபளக்கும் அந்த வாள் நிதானமாய் மேலெழுந்து அந்தப் பெண்ணின் பின்னங்கழுத்தைக் குறிவைத்து சட்டெனக் கீழ் இறங்குகிறது. ஒரே வெட்டில் அவள் தலை துண்டிக்கப்படுகிறது.
காணொளியின் காட்சிகள் முடிந்தது. ஆனால், அது உண்டாக்கிய உள்ளக் கொதிப்பும் ஆற்றாமையும் ஆத்திரமும் அவ்வளவு சீக்கிரம் முடிந்து போகாது. போகக் கூடாது.
- ஆதாரம்-> வினவு -
இப் பெண் யாருமல்ல ரிஷானா தான். குடும்பத்தின் சுமையை தூக்கி எண்ணற்ற கனவுகளுடன் பணிப்பெண்ணாகச் சென்றவரை உடலாகப் பார்க்க முடியவில்லையே என்று பெற்றோர் பரிதவிக்கின்றனர்.
அப்படி என்ன தவறு தான் இந்த ரிஷான செய்தார்? தவறுதலாக பாலூட்டுகையில் குழந்தை புரைக்கேறி இறந்தது தான்.
இறந்த குழந்தை இறந்தது தான் அதற்காக ஏன் இன்னும் ஒரு உயிரைப்பறித்தெடுக்க வேண்டும்? மனித நேயம் வாழ்வுரிமை என்பதற்கு அப்பாற்பட்டதே "ஷரியா" சட்டம் என்பதை மனம் என்னவோ ஊகிக்கின்றது.
என்ன தான் இருந்தாலும் அப் பெண்ணின் மரணத்திற்கு எம்முடைய ஆட்சியாளர்களும் காரணம் தான். அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு ஆக்கபூர்வமாக எந்த முயற்சிகளும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. கண்துடைப்பிற்காக போவதும் வருவதுமான பயணங்கள் இருந்தது.
என்ன தான் இருந்தாலும் அழ்ந்த அனுதாபங்கள்,

ஷிராணி பண்டாரநாயக்கா
முதலாவது பெண் பிரதம நீதியரசராக நாட்டுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றிய இரும்புப் பெண்மணியாக திகழ்கின்றார்.  நாடு ஒன்றைப் பொறுத்தவரை சட்டவாக்கத்துறையும், சனநாயகமுகே முக்கியமானது.
சட்டவாக்கத்தை நோக்கி எவருமே கேள்வியெழுப்ப முடியாது என்ற நிலை மாறி ஆட்சியாளர்களுக்கு ஸ்துதி பாடும் நிலையை நீதித்துறை மீது வலிந்து திணிக்கும் ஒரு செயற்பாடாகவே பிரதம நீதியரசர் மீதான இந்தப் பதவி விலக்கல்.
இதன் பின்னணியைப் பார்க்கையில் திவி-நெகும வில் சில பிரேரணைகளை மாற்றியதும், சிலவற்றை பகிரங்க விவாதத்திற்கு விட்டு வாக்களிப்புக்கு விட வேண்டும் எனவும் கட்டளையிட்டமையே.
இதை விட வேறேதும் பிரதம நீதியரசர் செய்யவில்லையே. பலவந்தமாக வெளியேற்பட்டதாக அவர் இன்னும் சொல்லிக்கொண்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு பாரிய பிரச்சனையாகவே தெரிகின்றது.
                                     
அத்தோடு அவர் ஒரு இரும்புப் பெண்ணாகவே இன்னமும் தெரிகின்றார். எதற்கும் வளைந்து கொடுக்காத அவரின் துணிச்சல் பெண்ணுலகத்திற்கு பெரும் எடுத்துக்காட்டு.
ஆட்சியாளர்களை எதிர்த்தால் இதுவே முடிவு என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. என்ன தான் இருந்தாலும் ஷிராணி பண்டாரநாயக்க இன்னும் மக்கள் மனங்களில் பிரதம நீதியரசரே.
                           



விஸ்வரூபம்.
ஒரு கலையாக, கலைஞனாக, திரைப்படங்களை பார்ப்பதை விடுத்து இனவாத நோக்கிலும், மதவாத அடிப்படையிலும் விமர்சிப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.
50 வருட சினிமா உலகில் கமலது பலத்தை தெரிந்துகொள்வதற்கு சிலர் சந்தர்ப்பங்களை வகுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள்.
விஸ்வரூபம் பார்ப்பதற்கு இந்தியாவிற்கோ, இல்லாவிட்டால் மலேஷியாவுக்கோ போய்த்தான் பார்க்கவேண்டும் என்றளவில் இலங்கையில் செங்(?)கோலாட்சி நடக்கின்றது. நல்ல வேளை ரஹ்மான் இசையமைக்கவில்லை, இல்லாவிட்டால் அவரும் சட்னியாகியிருப்பார். விஸ்வரூபம் படத்தின் கதை தொடர்பாக நண்பன் ஒருவர் பகிர்ந்த விடயம்.
இவன் தீயென்று தெரிகின்றதா?
                                   
சில பல விடயங்களை கேட்க விரும்புகின்றேன்.
நண்பன் ஒருவர் பகிர்ந்த விடயம்,
முஸ்லிம்களின் அமைப்பிலே திரைப்படங்களைப் பார்க்கக்கூடாது என்பதே. நீங்கள் பின்பு எதற்கு உங்கள் மதத்திற்கு எதிராக இருக்கின்றீர்கள்.
தவிர  குளியாப்பிட்டிய நகரில் அஸ்வெத்தும விஹாரைக்கு அருலிருந்து வெதஹாமுதுருவோ என்பரின் கீழ் இயங்கும் ஹெலசிஹல ஹிரு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிக்குகள் உட்பட சுமார் 150 பேர் அடங்கிய குழுவொன்று குளியாப்பிட்டி நகருக்கு முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படக் கூடிய பதாதைகளை ஏந்தியவாறு குளியாப்பிட்டிய பஸ் நிலையத்திற்கு அருகில் சென்று அல்லாஹ் என்ற அரபு பதாதை சூட்டப்பட்ட கொடும்பாவி ஒன்றை எரித்தனர். இவர்கள் ஏந்தி வந்த பதாதைகளில் முஸ்லிம்களை மிகவும் நோவிக்கும் வகையில் பன்றி ஒன்றின் உருவத்தின் மேல் அரபில் அல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கு நீங்களும் , உங்கள் அமைச்சர்களுமாகச் சேர்ந்து என்ன செய்தீர்கள்?
ரிஷானாவுக்காக என்ன செய்தீர்கள்?
அனுராதபுரத்தில் தர்க்கா தகர்க்கப்படும் போது என்ன செய்தீர்கள்?
உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். இரட்டைவேடம் போடுவதை மாற்றி பாருங்கள். வித்தியாசங்களை உணர்வீர்கள்.

மஹேல.
கனவானாக விடைபெற்றிருக்கின்றார்.
முரளி, சங்காவைப் போல மனங்கவர்ந்த ஒரு வீரன். அணித்தலைவராக அவுஸ்ரேலியாவில் தொடரை சமப்படுத்தியிருக்கின்றார். நான்காவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்ரேலியா சார்பில் 13 பேர் (2நடுவர்கள்)  விளையாடியிருக்காவிடின் தொடரை வென்று சாதித்துக்கொடுத்த பெருமையும் அவருக்கே.

வாழ்த்துக்கள் மஹேல.


                      
                     

Sunday, January 13, 2013

பொங்கலும் புது வாழ்வும்.

முதலிலே பொங்கலைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைவரிற்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

உழவர் திருநாள் தமிழர் பெருநாள் தைப்பொங்கல் நன்நாள். பொங்கல் மங்கலம் எங்கும் தங்கிட இன்பங்கள் எங்கும் பொங்கித் ததும்பிட வந்ததே தைத்திருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல தை வந்தால் மகிழ்ச்சியும் கூட வரும்.

உழைக்கும் வர்க்கத்தினரால் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே இத் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது. நாளும் பொழுதும் உழவரோடு சேர்ந்து பாடுபட்டு உழைத்த பசுக்கூட்டங்களுக்கும் காளைகளுக்கும் பொங்கிப் படைக்கும் நாளே பட்டிப்பொங்கல் திருநாள்.
ஒவ்வொரு பண்டிகைகளும் விழாக்களும் எதற்காக எம்மிடத்திலே தரப்பட்டிருக்கின்றன. உண்டு உறங்கி கொண்டாடி மகிழ்வதற்கா? இல்லை. தனியே அந்த நோக்கங்களிற்காக மட்டும் எமக்கு இப்பண்டிகைகள் விழாக்கள் தரப்படவில்லை. ஒவ்வொரு கொண்டாட்டங்களின் போதும் எம்முள் இருக்கின்ற ஒவ்வொரு தீய விடயங்களை தீய குணங்களை அகற்றி வையகத்தில் மாண்பு பெறுவதற்காகவே இப்பண்டிகைகள் படைக்கப்பட்டிருக்கின்ற உண்மைத் தத்துவத்தை உணர முற்பட வேண்டும்.
மனித மாண்பை பாதிக்காத நவீன தத்துவத்தை வரவேற்போம். உலகிலே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மொழிகளில் முதலிடம் பெறுவது தமிழ் மொழியே. தமிழர்கள் தமக்கென்று தனித்துவமான பண்பாடு பாரம்பரியங்களைக் கொண்டிருப்பதனாலேயே இன்றும் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழர் பண்பாட்டை போற்றாத மேதைகள் இல்லை. தம் கவிவரிகளிற்குள் சிறைப்பிடிக்காத கவிஞர்கள் இல்லை எனலாம். அந்தளவிற்கு தமிழ்மொழி ஆழப் பரந்திருக்கின்றது. மொழி என்கின்றபோது அதை உயிர்நாடியாக சுவாசிக்கும் இனத்தவர்கள் வாழ்வியலும் தவிர்க்க முடியாததுவே.
                                 
அப்படியான தமிழர் வாழ்வியல் பண்பாடுகள் தடம்மாறி சென்றுகொண்டிருக்கின்றது. ஒருவனுக்கு ஒருத்தி என்றும் கற்பில் சிறந்தவர் கண்ணகி என்றும் காவியங்களில் எழுத்து வடிவில் இருந்தால் போதாது. அது எந்த அளவிற்கு நடைமுறையிலிருக்கின்றது என்பது வேதனைப்பட வேண்டியதொன்றே.
கற்பதற்காக பள்ளி சென்ற மாணவி கர்ப்பமுறுவதும் தந்தையாலே மகள் வஞ்சிக்கப்படுவதும் நடு இரவிலே ஏழு வயது சிறுமி பதின்ம இளைஞனால் இம்சிக்கப்படுவதும் பாதையோரங்களில் எல்லாம் இம்சைகள் தொடர்வதும் தமிழர் பண்பாட்டிற்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு செய்யுமா?
பட்டாசு கொழுத்தி பொங்கிப்படைத்து உண்டு மகிழும் பொங்கலாக மட்டும் இத்திருநாள் அமைந்துவிடக் கூடாது. அதனையும் தாண்டி தமிழர் பண்பாட்டியல் உறுதியான வரம்பிற்குள் வரச்செய்யும் வரலாறாக மாற வேண்டும்.
சட்டம் போட்டு தடுப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கின்றது என்று நாம் ஒதுங்கி விட்டால் தமிழன் என்று சொல்கின்ற போது நெஞ்சை நிமிர்த்த முடியாது. மாறாக பூமாதேவியை முகத்தரிசனமே செய்ய வேண்டியேற்படுவது தவிர்க்க முடியாததுவே.
எவற்றிற்காக இச்சம்பவங்கள் அரங்கேறுகின்றன என்பதை உணர்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்கின்ற போது வளம்மிக்க சமுதாயம் துளிர்விட ஆரம்பித்துவிடும். நம்பிக்கையோடு மனச்சுமைகளோடு இறக்கி வைக்க ஒருவர் கிடைக்கின்ற போது மட்டுமே இது சாத்தியமாகின்றது. தனியே நண்பர்கள் என்று சந்தோஷத்திலே கரம்கோர்ப்பதை விடுத்து அவர்களது உள்ளார்ந்த பிரச்சினைகளிற்கு உறுதியான தீர்வு காண வேண்டும். இங்கு இடம்பெறுகின்ற அசம்பாவிதங்களால் எனது வீட்டுக்கூடாரம் உடைந்து விழப்போகின்றது என்று எண்ணுவதை விடுத்து பண்பட்ட எம் தமிழினத்தின் தலைவிதியை நிர்ணயிக்க முற்படல் வேண்டும்.
விரக்தியும் ஆதரவற்ற நிலையுமே பதின்ம வயதுக்கர்ப்பத்திற்கும் திருமணமாகாத கர்ப்பங்களிற்கும் காரணமாகி விடுகின்றது. கடல் கடந்த நாடுகளிலே இனவியல் எல்லாம் சர்வசாதாரணமே என்று புதுமைவாதிகள் புலம்பக்கூடும். எனினும் பண்பட்ட தமிழரது வழக்கங்கள் எதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. “தமிழன் என்றொரு இனமுண்டு தனித்தே அவர்க்கோர் குணமுண்டு” என்று அழகான வரையறை தருகின்றது. இந்த வகையிலே நோக்குகையில் இவையெல்லாம் ஓரங்கட்டப்பட்டு விடுகின்றன.
பண்பாடே ஒவ்வொரு சமூகங்களினதும் முகவரி. பல்வேறு முகவரிகள் அழிந்திருக்கின்றன. அழிக்கப்பட்டிருக்கின்றன. எப்போது ஒரு இனத்தின் பண்பாடு பாரம்பரியங்கள் சீரழிக்கப்படுகின்றதோ அன்றே அவ்வினம் அழிவை நோக்கிச் செல்கின்றது என்பது நம்பிக்கை. பண்பாடானது எப்போதும் வளர்ச்சிப்பாதையிலே செல்ல வேண்டும்.
                                     
நாம் தெரிந்தோ தெரியாமலோ தனித்துவ கலாச்சார பண்பாட்டுக் காரணிகளை இழந்து மேற்கத்தைய பண்பாட்டுக்காரணிகளை அணிந்து கொண்டிருக்கின்றோம். தற்போது எம் இனத்தின் சமூகமயமாக்கல் காரணிகளோடு இவ் மேற்கத்தைய மயமாகுதல் கலந்துவிட்டது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நவீன உலகோடு ஒத்திசை உள்ளவர்களாக்கவே விரும்புகின்றனர். இச்செயற்பாடு எந்தளவிற்கு அனுகூலங்களைத் தருகின்றதோ அதேயளவு பிரதிகூலங்களையும் தரும் என்பதை உணர மறுக்கின்றனர். இது பிழையல்ல. தமது கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக அனைத்து நவீனமுறை கல்வித்தொழில்சார் வளங்களை ஏற்படுத்துவதிலே கவனமாயிருக்கின்றனர். இவற்றிலே நவீனத்துவம் எது என்பதனை அறியாமை காரணமாக மேற்கத்தைய நடைமுறைகள் தான் நவீனத்துவம் வாய்ந்தவை என்ற பிழையான முடிவை எடுக்கின்றனர். இதன் பிரதிகூலமே நவீனமயமாதல் என்று கூறிக்கொண்டு தமது பண்பாட்டையும் இழந்து நவீனத்துவமும் அடையாது இருப்பதையும் தொலைத்துவிடுவதே.
ஆகவே இச்சமூகம் தடம்மாறுவதிலே நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றோரின் பங்களிப்பு இல்லாமல் இல்லை. ஆனால் தனியே பெற்றோரை மட்டுமே கூண்டிலே ஏற்றிவிட முடியாது. பெற்றோரோடு கழிக்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தை பிள்ளைகள் யாருடன் செலவழிக்கின்றதோ அங்கும் இத்தவறுகளிற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததுவே.
சமூகத்திலிருக்கின்ற ஒவ்வொரு பிரஜையும் இதன் பாரதூர விளைவுகளை உணர்ந்து செயற்பட வேண்டும். பண்பாடு எமது இனத்தின் முகவரி என்பதை நாம் எந்தவிடத்திலும் மறந்துவிடமுடியாது.
புதுப்பானையிலே புத்தரிசி போட்டுப் பொங்குவதால் மாத்திரம் எம்வாழ்வு புதுமையடைந்து விடப்போவதில்லை. எண்ணம் சொல் செயற்பாடு இவற்றின் வழியான பண்பாடு வளம்பெறுகின்ற சில வழிகள் செயற்படுத்தப்பட வேண்டும். தேவையற்ற கலாச்சார பிறழ்வுகளிற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டுமே நுகரும் அன்னம் போன்றவர்களாக இளைய சமூகம் மாற வேண்டும். நல்லது கெட்டது எது என்பதை பெற்றோரும் மற்றோரும் உணர்ந்து நாளைய உலகை ஆளப்போகின்ற இளைய சமூகத்தின் மனங்களிலே பதித்தல் தலையாய கடமையாகும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவோட்டத்திற்கு ஏற்றது என்றாலும் நல்லவற்றை நுகர்ந்து நல்லவர்களாக மாற வேண்டும். எமது சமுதாயம் தாண்ட வேண்டிய தடைகள் நிறையவே உள்ளன. எனவே இச்சிறுதடைகளை தாண்டி புதியதோர் பூமி செல்ல தைத்திருநாளிலே உறுதியெடுப்போமாக.
என் பாடசாலைக் கால பொங்கல் சம்பந்தமான சில புகைப்படங்களை ரசிக்க
சிவஞான வைரவர் ஆலயப் பொங்கல்

Monday, January 7, 2013

ஒஸ்கார், ஆசியாவின் ஆச்சரியம், மானிப்பாய் பரிஷ் லியோ.


நேற்று இடவேண்டிய பதிவு. கால நிலை காரணமாக பிற்போடப்பட்ட நான் அங்கம் வகிக்கும் மானிப்பாய் பரிஷ் லியோக் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல்+கலை நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றமையால் பதிவிட முடியவில்லை.
முதலிலே தமிழரின் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அத்தோடு ஆசியாவின் ஆச்சரியமான மன்னர், மானிப்பாய் பரிஷ் லியோவின் ஒன்று கூடல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் சேர்த்து இடுகையிடுகின்றேன்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான் ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்.
                     
அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.
2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
                                

இவர் மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீவிருது, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, (9 முறை தொடர்ந்து பெற்றார்) ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
                               

சிகரமாக, இந்திய குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டது.
மீண்டும் இசப்புயலிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆசியாவின் ஆச்சரியம்.
உலகக்கிண்ண கொண்டாட்டங்களுக்குள் நாசூக்காக எரிபொருட்களின் விலையேற்றிய நம்ம மாமா மீண்டும் எரிவாயுக்களின் விலையையும் கூட்டியுள்ளார். கிடைக்கும் வருமானம் நாட் செலவுக்கே போதவில்லைப் போலும். நல்ல வேளை பொங்கல் பரிசாக இவ் விலையேற்றத்தை தரவில்லை.
                       
அத்தோடு பொங்கலோடு பொங்கலாக மாமா யாழ்ப்பாணம் வர திட்டம் தீட்டியிருக்கின்றார் என்று கதைகள் கசிகின்றன. நயினை அம்மனையும் கும்பிடப் போகின்றாராம். அம்மாளாச்சி இவனுகளுக்கு ஒரு காட்டு காட்டு. எங்களப் போட்டு படுத்தின பாட்டுக்கு.
இப்படி அப்பப்ப வந்தாத்தான் மாமா பயணிக்கிற வீதிகளாவது “காப்பற்”றைக் காணும். அது போக மாமாவை யாழ்ப்பாணத்தில வைத்து யார் வரவேற்கின்றதென்று மூன்று பேருக்கிடையில் கடும் பனிப்போராம். இரண்டு பேரை எல்லாருக்கும் தெரியும். மூன்றாமவரும் விரைவில் திரைக்கு வரலாம்.

மானிப்பாய் பரிஷ் லியோக் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல்
சமூகத்திற்கு சேவையாற்றுவதை மட்டுமே நோக்காக கொண்ட  லியோக் கழகத்தினைப் பொறுத்த வரை ஒன்றுகூடல் நிகழ்வுகள் மட்டுமே மகிழ்ச்சியான செயற்திட்டம்.
                                        

2012ம் ஆண்டின் வருட இறுதி ஒன்று கூடல் கால நிலை காரணமாகவும்
வெள்ள நிவாரணங்களை சேகரித்தல் காரணமாகவும் உரிய திகதியில் இடம்பெறாமல் போனது. நேற்றைய தினம் இவ் நிகழ்வுகள் தாய்க் கழகமான மானிப்பய் பரிஷ் லயன்ஸ் கழகத்தினரின் வருகையோடு சிறப்பாக  நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது.
சகல முறையிலும் ஒத்துழைப்புகளை வழங்கிய லியோக்கள், லயன்ஸ் அனைவரிற்கும் நன்றிகள்.
எல்லா விடயங்களையும் பகிர்ந்தால் எனக்கு நேரமின்மையுமும், உங்களுக்கு சலிப்பும் ஏற்படலாம்.
நேரம் கிடைக்கின்ற போது அவை சம்பந்தமாக மேலும் பகிர்கின்றேன்.
புகைப்படங்கள் பார்த்தவர்களிற்கும், பார்க்காதவர்களுக்கும் சேர்த்து....

LEO'S NIGHT.

Friday, January 4, 2013

கட்டிப்போட்ட கும்கி....


வெளியாகயும் தாமதமாகவே பார்த்த சிறந்த காவியங்களில் “கும்கி”யும் ஒன்று. ஒரு சில தவிர்க்க முடியாத வேலைகளாலும், சொந்தங்களிற்கான வெள்ள நிவாரணங்களை திரட்டி கையளிப்பதிலும் கொஞ்சம் பிஸியானதாலும் வெளியாகியவுடன் படத்தை பார்த்து உடனே பதிவிட முடியவில்லை.
கொஞ்சம் தாமதமாக இட்டாலும் தரமான காவியத்திற்கு பதிவொன்று எழுதியதில் மகிழ்ச்சி. பாடல்கள், கமராவினூடாக கிராமத்தை காட்டிய விதம், யானையையும் ஹீரோக்கு சமனாக கையாண்டமை எல்லாம் ரசிக்க வைக்கின்றது.
யானைகளின் மோதல்தான் கதைக்களம் என்று சொல்லிவிட்டு படத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் மட்டுமே யானைகளைக் காட்டியிருப்பதில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளார்கள். இயக்குநரையும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி யானைகளை சினிமாவுக்காக துன்புறுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் வாரியத்தின் மேற்பார்வையில் ஒவ்வொரு படப்பிடிப்பின்போதும் ஒரு மருத்துவரை தயாரிப்பாளரின் செலவில் உடன் தங்க வைத்து, அரசு அலுவலர் ஒருவரும் உடன் இருந்து கண்காணிக்கும் நிலையில்தான் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அரசு விதி. ஆனால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ‘டப்பு’வை ‘வெட்டிவிட்டு’ அரசு அலுவலர்களையும், அரசு மருத்துவரையும் ‘கட்’ செய்துவிட்டு தாங்களே ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்ததாகச் சொல்லி சர்டிபிகேட் வாங்கிவிடுவார்கள். இங்கேயும் அதுதான் நடந்திருக்கிறது..!
                           
அறிமுக நடிகர் விக்ரம் பிரபுவுக்கு சரளமாக பேசவும் வருகிறது.. நடிக்கவும் வருகிறது.. வயசுக்கேற்ற காதல் ஜாடையையும் காட்டத் தெரிகிறது. இதுக்கு மேலும் மனதைப் பிழியும் நடிப்பைக் கொட்ட அவருக்கேற்ற கதைகள் அடுத்தடுத்து அமையுமானால் இவரும் பிரகாசிக்கலாம்..! காத்திருப்போம்..
ஆனாலும் தம்பி இராமையாவுடனான இவரது மோதல் காட்சிகள் பையனுக்குள் நடிப்பும் இருக்குன்னும் சொல்ல வைக்குது..!

லட்சுமி மேனன் நடிச்ச முதல் படம்.. இரண்டாவது படமே முதல்ல ரிலீஸ் ஆகி இளசுகளின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டார் லட்சுமி..!  கிராமத்து அல்லிக்கேற்ற முகம்..! முழுக்க மூடிய உடையில் வெளியில் தெரிந்த ‘சில’வைகளை வைத்தே பெண்ணை வெள்ளாவி வைத்த வெளுத்தது போல காட்டியிருப்பதுதான் அந்த கிளைமேட்டுக்கு ஒத்துவரவில்லை..!  சிணுங்குகிறார்.. மின்னுகிறார்.. பாடுகிறார்.. ஓயிலாக நடக்கிறார். காந்தப் பார்வையை வீசுகிறார்.. எல்லாம் இருந்தும் காதலில் ஒரு ஆழமும், சுவாரஸ்யமும் இல்லாததால் அத்தனையும் வீணாகிப் போயிருக்கிறது.. யானையைக் கண்டு மிரளும் லட்சுமியின் கண்களை பார்த்து யானையே மிதந்திருக்கும்..! யானையைக் கொஞ்சும் லட்சுமியும், விக்ரமின் காதல் தூதை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மருண்டு போய் கண்ணீர்விடும் லட்சுமியை பிடிக்கத்தான் செய்கிறது..!
                           

நூல் பிடித்தாற்போன்று செல்லும் காட்சிகளை ஒருங்கிணைக்க தம்பி இராமையா பெரிதும் உதவியிருக்கிறார். அவருடைய மைண்ட் வாய்ஸ் கமெண்ட்டுகள் கலகலப்பை கூட்டுகின்றன..!  2 நிமிடத்திற்கு முன்னால் ‘நம்ம சங்கை அறுத்திருவாங்க’ என்று சொல்லிவிட்டு அதற்குப் பின்பு காதலை சேர்த்து வைக்கவும் மனம் மாறும் தம்பி இராமையாதான் படத்தினை இறுதிவரையிலும் கொண்டு போயிருக்கிறார்..!

இந்தப் படம் ஒளிப்பதிவுக்காகவே பெரிதும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. சுகுமாரின் படப்பதிவு அந்த மலையையும், மக்களையும், இருப்பிடத்தையும் பல கோணங்களில் அழகாக பதிவு செய்திருக்கிறது. இதற்காக எத்தனை உழைப்பை அவர்கள் செலவிட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகவும் உள்ளது. பாடல் காட்சிகளிலும், ஏரியல் வியூக்களிலும் இப்படி ஒரு இடத்தில் குடியிருக்கப் போனால்தான் என்ன என்ற ஏக்கத்தைத்தான் தோற்றுவிக்கிறது..! வெல்டன் சுகுமார் சேர்..!

‘சொல்லிட்டாளே அவ காதலை’ பாடலும், ‘சொய் சொய்’ பாடலும்தான் இமான் இசையில் கவனிக்க வைக்கிறது.. பாடல்களைவிடவும், இசையைவிடவும், பாடல் காட்சிகள் மிக ரம்மியமாக இருந்து தொலைந்திருப்பதால் பாடல்களை தனியே கேட்டுத்தான் ரசித்தேன்..! இமானிடம் ஸ்பெஷலாக கேட்டு வாங்கியிருக்கும் ‘சொய் சொய்’ பாடல் அதற்கேற்ற உச்சத்தை எட்டியிருக்கிறது.. இப்போது எஃப்.எம்.களில் கட்டாய உணவாக அதுதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது..!
                        

காலம், காலமாக மலையிலேயே காலம் தள்ளி வரும் மக்களுக்கு யானை மீது ஏன் இவ்வளவு பயம் வருகிறது..? கும்கி யானைக்கும் மற்ற யானைகளுக்கும் சட்டென அவர்களால் வித்தியாசம் கண்டறிய முடியாதா என்ன..? இடையில் காமெடியன்களாக இரண்டு வன இலாகா அதிகாரிகள்.. ‘கொம்பனை எந்தக் கொம்பனாலும் தூக்க முடியாது’ என்று அந்தக் கொம்பனுக்கே கொம்பு சீவி விடுகிறார்கள்.. எப்படியோ ஒரு நாளில் மாட்டிய கொம்பனை மடக்கி காட்டுக்குள் அனுப்பி வைத்த கதைதான் உண்மையில் நடந்திருக்கிறது.. அதற்காக அதையே இவ்ளோ நீளத்துக்கு பில்டப்பாக செய்ய வேண்டுமா என்ன..? இறுதிக் காட்சி தமிழ்ச் சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது என்று பலரும் ரிலீஸுக்கு முன்பே சொல்லியும் அதனை மாற்ற மறுத்துவிட்ட இயக்குநருக்கு  பாராட்டுக்கள்..! கதைக்குப் பொருத்தமான முடிவுதான்..! ஆனால் இடையில் காதல்தான் நுழைந்து அல்லற்படுத்திவிட்டது..!

காடு விலங்குகளின் இருப்பிடம். அவைகளின் தேசம்.. அதில் மனிதர்கள் குடியிருந்து வாழ்ந்தால், அவற்றோடு இயைந்துதான் இருக்க வேண்டும்.. எந்த மலைவாழ் மக்களும் விலங்குகளை எதிர்கொள்ள எந்த நேரமும் தயாராகத்தான் இருப்பார்கள். யானைகளின் அட்டூழியம் என்றுகூட இதனைச் சொல்லக் கூடாது.. சொல்லவும் முடியாது.. காட்டு யானை எப்படியிருக்கும்..? அதன் குணாதிசயங்கள் என்ன என்பது நமக்குத் தெரியாதா..? அவற்றிற்கான இயற்கை வழிகளை மனிதர்களே அடைத்துவிட்டால், அவைகள் பாவம் என்னதான் செய்யும்..?

குளம், குட்டைகளைத் தேடித்தான் அடர்ந்த காடுகளில் இருந்து யானைகள் வெளிப்படுகின்றன.. அவற்றுக்கான நீர் ஆதாரங்கள் முன்பு இருந்த இடத்தில் இப்போது இல்லை என்பதற்கு மனிதனின் செயல்கள்தானே காரணம்..? பின்பு அவற்றைக் குறை சொல்லி என்ன புண்ணியம்..?
                                

படம் நெடுகிலும் யானைகளின் இயல்புகளை கொடூரமாக சித்தரித்திருப்பதால் இவற்றை பார்க்கும் இளைய சமுதாயத்தினரின் மத்தியிலும் இவையே பதிவாகுமே..? யானைகளின் வாழ்க்கை முறையை பற்றியும் கொஞ்சம் எடுத்துச் சொல்லியிருக்கலாம்..! இறுதியில் கொம்பன் யானையை கொன்றே தீருவது என்று முடிவெடுத்து இயக்குநர் செய்திருப்பது விலங்குகளின் வாழ்க்கைக்கு மனிதன் தடை போடுவது போலத்தான் உள்ளது..!

ஒரு திரைப்படமாக பார்க்கப் போனால் பசுமை நிறைந்த காட்சிகளையும், அழகான நடிகர், நடிகைகளையும், கடுமையான உழைப்பையும் வைத்திருந்து, மனதைத் தொடும் காட்சிகளையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் கொடுத்திருப்பதால் இந்த கும்கி மாணிக்கம் யானைகளின் மாணிக்கமாகவே தெரிகிறான்..!

பிரபல்யமான பதிவுகள்