Saturday, September 15, 2012

முரளி இணக்க வெற்றிக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடர்:. எனது பார்வையில்..

                       
2012ற்கான முரளி இணக்க வெற்றிக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடர்  கடந்தவாரம் நிறைவு பெற்றிருக்கின்றது. பல கிறிக்கட் பிரபலங்கள், வீரர்கள் பங்கு பற்றியிருந்தாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமலும், சொல்லும் படியாக யாருக்கும் தெரியாமலும் அமைதியாகவே நிறைவடைந்திருக்கின்றது.

                         

இலங்கையின் நாலாபுறங்களிலுமிருந்து அணிகள் தெரிவு செய்யப்பட்டு T-20 போட்டியாக 5 மைதானங்களில் இடம்பெற்ற போட்டிகள் 5 நாட்களிலேயே நிறைவு பெற்றுள்ளது.
ஆண்கள் பிரிவிலே 19 வயதிற்குட்பட்ட 12 அணிகளும், பெண்கள் பிரிவிலே 23 வயதிற்குட்பட்ட  8 அணிகளுமாக மொத்தம் 20 அணிகள் 2012ற்கான முரளி இணக்க  வெற்றிக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரிலே பங்குபற்றியிருக்கின்றது.

                           

                         
5 மைதானங்களிலே 5 நாட்களிலே மொத்தமான 36 போட்டிகளும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் இடம்பெற்ற மாங்குளம் மகா வித்தியாலயம் , வவுனியா மத்திய கல்லூரி, ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி  ஆகிய மைதானங்களில் ஒரு சில அபிவிருத்திகள் தென்பட்டாலும் யாழ் மாவட்டதில் போட்டிகள் இடம்பெற்ற பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் அபிவிருத்திகள் எவற்றினையும் காணமுடியாதது எம்மவர்களைப் பொறுத்தவரை ஏமாற்றமே. ஏற்பாட்டாளர்களின் தவறோ அல்லாவிட்டால் நிர்வாகத்தில் ஏற்பட்ட தவறோ இதுவரை தெரியவில்லை.

                          

இவற்றினை மீறி எம்மவர்கள் உண்மையிலே சாதித்திருக்கின்றனர். அவர்களுக்கான வாழ்த்துக்களை முதலிலே பகிர்ந்து கொள்ளலாம். ஆண்கள் பிரிவிலே பலமானதும், புற்தரைகளி(TURF)ல் போட்டிகளில் ஈடுபடும் அணிகள் எல்லாவற்றையும் வென்று இறுதிவரை முன்னேறிய யாழ்ப்பாணப் பாடசாலைகளின் தெரிவு அணியினரின் திறமைகளுக்கு வானமே எல்லை.

                          

மாவட்ட மாகாணப் பயிற்றுனர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் லக்‌ஷித, மற்றும் ரவீந்ர புஷ்பகுமார வடபுலத்தின் கிறிக்கட்டினை வளர்த்தெடுக்கப் பாடுபடுகின்றமை புலப்படுகின்றது.

                            

பாடசாலைக் காலத்திலிருந்தே மாணவர்களினை கிறிக்கட் மீதான ஆர்வம் கொண்டவர்களாக வளர்ப்பதோடு, கிறிக்கட்டினை இளவயதில் புகுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கது.

                          

சர்வதேசக் கிரிக்கட்சபை(ICC), GRANGE HOTEL, INDIAN OCEN DISASTER RELEF (IDOR), MAHELA FOUNDATION, EMIRATES, MAS HOLDINGS, FOUNDATION OF GOODNESS, AUSTIN MANAGEMENT LIMITED (AML), RED DOT TOURS ஆகிய பிரமாண்டமான நிறுனங்களை அனுசரணையாளர்களாக இணைந்து போட்டிகள் ஒழுங்கமைத்து நடாத்தப்பட்டாலும் போட்டித் தொடரின் தரம் சொல்லும் படியாக இல்லை.
முற்று முழுதாக அணுசரணையாளர்கள் வீணடிக்கப் பட்டிருக்கின்றனர்.
ஏற்பாடுகள் கூட அவ்வளவு திருப்திகரமானதாக அமையவில்லை. வீரர்களின் உடையும்,இறுதிப் போட்டி இடம்பெற்ற மைதானமுமே ஓரளவு வரவேற்கக் கூடிய விடயம். 

அத்தோடு முற்று முழுதான இராணுவப் பிரசன்னமும் போட்டியின் தரத்தினை இழக்க செய்திருக்கின்றது.தவிர இறுதிப் போட்டிக்கு அழைக்கப்பட்டவர்களிலே விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்களே இருந்தனர். தமிழர் பிரதேசத்திலே ஒரு தமிழனால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்விற்கே இந்தக் கதி என்றால் ஏனையவை பற்றி சொல்லவும் வேண்டுமா? 
                            

இலங்கையின் சாதனை நாயகன் முரளியின் பெயரில் முரளியால் இத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் போட்டி ஒழுங்கமைப்பிற்காக ஏற்பாட்டுக் குழு அமைக்கப் பட்டிருக்கலாம். அவ் ஏற்பாட்டுக் குழுவினரால் போட்டிகளின் ஒழுங்குபடுத்தல்கள்  ஏதும் நிறுவனத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டிருக்கலாம். அவர்களின் அந்த நிறுவனங்களின் தவறுகளிற்காக நாம் முரளி மீது குற்றம் சுமத்துவதில் எதுவித அர்த்தமும் இல்லை. தவிர கீழ் மட்டத்தில் இடம்பெறும் எல்லா விடயங்களும் மேல் மட்டங்களிற்கு செல்வதுமில்லை. அதனை கண்காணிப்பதற்கு மேல் மட்டங்களுக்கு நேரமும் கிடைப்பதில்லை.  
   
என்ன தான் இருந்தாலும் தொடர்ந்து வருகின்ற தொடர்கள் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமானதுமாக அமையும் என எதிர்பார்க்கலாம்...                                                                                                                                                                                                                                   

No comments:

Post a Comment

பிரபல்யமான பதிவுகள்