
கொஞ்சம் தாமதமாக இட்டாலும் தரமான காவியத்திற்கு பதிவொன்று எழுதியதில் மகிழ்ச்சி. பாடல்கள், கமராவினூடாக கிராமத்தை காட்டிய விதம், யானையையும் ஹீரோக்கு சமனாக கையாண்டமை எல்லாம் ரசிக்க வைக்கின்றது.
யானைகளின் மோதல்தான் கதைக்களம் என்று சொல்லிவிட்டு படத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் மட்டுமே யானைகளைக் காட்டியிருப்பதில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளார்கள். இயக்குநரையும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி யானைகளை சினிமாவுக்காக துன்புறுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் வாரியத்தின் மேற்பார்வையில் ஒவ்வொரு படப்பிடிப்பின்போதும் ஒரு மருத்துவரை தயாரிப்பாளரின் செலவில் உடன் தங்க வைத்து, அரசு அலுவலர் ஒருவரும் உடன் இருந்து கண்காணிக்கும் நிலையில்தான் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அரசு விதி. ஆனால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ‘டப்பு’வை ‘வெட்டிவிட்டு’ அரசு அலுவலர்களையும், அரசு மருத்துவரையும் ‘கட்’ செய்துவிட்டு தாங்களே ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்ததாகச் சொல்லி சர்டிபிகேட் வாங்கிவிடுவார்கள். இங்கேயும் அதுதான் நடந்திருக்கிறது..!

அறிமுக நடிகர் விக்ரம் பிரபுவுக்கு சரளமாக பேசவும் வருகிறது.. நடிக்கவும் வருகிறது.. வயசுக்கேற்ற காதல் ஜாடையையும் காட்டத் தெரிகிறது. இதுக்கு மேலும் மனதைப் பிழியும் நடிப்பைக் கொட்ட அவருக்கேற்ற கதைகள் அடுத்தடுத்து அமையுமானால் இவரும் பிரகாசிக்கலாம்..! காத்திருப்போம்..
ஆனாலும் தம்பி இராமையாவுடனான இவரது மோதல் காட்சிகள் பையனுக்குள் நடிப்பும் இருக்குன்னும் சொல்ல வைக்குது..!
லட்சுமி மேனன் நடிச்ச முதல் படம்.. இரண்டாவது படமே முதல்ல ரிலீஸ் ஆகி இளசுகளின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டார் லட்சுமி..! கிராமத்து அல்லிக்கேற்ற முகம்..! முழுக்க மூடிய உடையில் வெளியில் தெரிந்த ‘சில’வைகளை வைத்தே பெண்ணை வெள்ளாவி வைத்த வெளுத்தது போல காட்டியிருப்பதுதான் அந்த கிளைமேட்டுக்கு ஒத்துவரவில்லை..! சிணுங்குகிறார்.. மின்னுகிறார்.. பாடுகிறார்.. ஓயிலாக நடக்கிறார். காந்தப் பார்வையை வீசுகிறார்.. எல்லாம் இருந்தும் காதலில் ஒரு ஆழமும், சுவாரஸ்யமும் இல்லாததால் அத்தனையும் வீணாகிப் போயிருக்கிறது.. யானையைக் கண்டு மிரளும் லட்சுமியின் கண்களை பார்த்து யானையே மிதந்திருக்கும்..! யானையைக் கொஞ்சும் லட்சுமியும், விக்ரமின் காதல் தூதை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மருண்டு போய் கண்ணீர்விடும் லட்சுமியை பிடிக்கத்தான் செய்கிறது..!

நூல் பிடித்தாற்போன்று செல்லும் காட்சிகளை ஒருங்கிணைக்க தம்பி இராமையா பெரிதும் உதவியிருக்கிறார். அவருடைய மைண்ட் வாய்ஸ் கமெண்ட்டுகள் கலகலப்பை கூட்டுகின்றன..! 2 நிமிடத்திற்கு முன்னால் ‘நம்ம சங்கை அறுத்திருவாங்க’ என்று சொல்லிவிட்டு அதற்குப் பின்பு காதலை சேர்த்து வைக்கவும் மனம் மாறும் தம்பி இராமையாதான் படத்தினை இறுதிவரையிலும் கொண்டு போயிருக்கிறார்..!
இந்தப் படம் ஒளிப்பதிவுக்காகவே பெரிதும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. சுகுமாரின் படப்பதிவு அந்த மலையையும், மக்களையும், இருப்பிடத்தையும் பல கோணங்களில் அழகாக பதிவு செய்திருக்கிறது. இதற்காக எத்தனை உழைப்பை அவர்கள் செலவிட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகவும் உள்ளது. பாடல் காட்சிகளிலும், ஏரியல் வியூக்களிலும் இப்படி ஒரு இடத்தில் குடியிருக்கப் போனால்தான் என்ன என்ற ஏக்கத்தைத்தான் தோற்றுவிக்கிறது..! வெல்டன் சுகுமார் சேர்..!
‘சொல்லிட்டாளே அவ காதலை’ பாடலும், ‘சொய் சொய்’ பாடலும்தான் இமான் இசையில் கவனிக்க வைக்கிறது.. பாடல்களைவிடவும், இசையைவிடவும், பாடல் காட்சிகள் மிக ரம்மியமாக இருந்து தொலைந்திருப்பதால் பாடல்களை தனியே கேட்டுத்தான் ரசித்தேன்..! இமானிடம் ஸ்பெஷலாக கேட்டு வாங்கியிருக்கும் ‘சொய் சொய்’ பாடல் அதற்கேற்ற உச்சத்தை எட்டியிருக்கிறது.. இப்போது எஃப்.எம்.களில் கட்டாய உணவாக அதுதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது..!

காலம், காலமாக மலையிலேயே காலம் தள்ளி வரும் மக்களுக்கு யானை மீது ஏன் இவ்வளவு பயம் வருகிறது..? கும்கி யானைக்கும் மற்ற யானைகளுக்கும் சட்டென அவர்களால் வித்தியாசம் கண்டறிய முடியாதா என்ன..? இடையில் காமெடியன்களாக இரண்டு வன இலாகா அதிகாரிகள்.. ‘கொம்பனை எந்தக் கொம்பனாலும் தூக்க முடியாது’ என்று அந்தக் கொம்பனுக்கே கொம்பு சீவி விடுகிறார்கள்.. எப்படியோ ஒரு நாளில் மாட்டிய கொம்பனை மடக்கி காட்டுக்குள் அனுப்பி வைத்த கதைதான் உண்மையில் நடந்திருக்கிறது.. அதற்காக அதையே இவ்ளோ நீளத்துக்கு பில்டப்பாக செய்ய வேண்டுமா என்ன..? இறுதிக் காட்சி தமிழ்ச் சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது என்று பலரும் ரிலீஸுக்கு முன்பே சொல்லியும் அதனை மாற்ற மறுத்துவிட்ட இயக்குநருக்கு பாராட்டுக்கள்..! கதைக்குப் பொருத்தமான முடிவுதான்..! ஆனால் இடையில் காதல்தான் நுழைந்து அல்லற்படுத்திவிட்டது..!
காடு விலங்குகளின் இருப்பிடம். அவைகளின் தேசம்.. அதில் மனிதர்கள் குடியிருந்து வாழ்ந்தால், அவற்றோடு இயைந்துதான் இருக்க வேண்டும்.. எந்த மலைவாழ் மக்களும் விலங்குகளை எதிர்கொள்ள எந்த நேரமும் தயாராகத்தான் இருப்பார்கள். யானைகளின் அட்டூழியம் என்றுகூட இதனைச் சொல்லக் கூடாது.. சொல்லவும் முடியாது.. காட்டு யானை எப்படியிருக்கும்..? அதன் குணாதிசயங்கள் என்ன என்பது நமக்குத் தெரியாதா..? அவற்றிற்கான இயற்கை வழிகளை மனிதர்களே அடைத்துவிட்டால், அவைகள் பாவம் என்னதான் செய்யும்..?
குளம், குட்டைகளைத் தேடித்தான் அடர்ந்த காடுகளில் இருந்து யானைகள் வெளிப்படுகின்றன.. அவற்றுக்கான நீர் ஆதாரங்கள் முன்பு இருந்த இடத்தில் இப்போது இல்லை என்பதற்கு மனிதனின் செயல்கள்தானே காரணம்..? பின்பு அவற்றைக் குறை சொல்லி என்ன புண்ணியம்..?

படம் நெடுகிலும் யானைகளின் இயல்புகளை கொடூரமாக சித்தரித்திருப்பதால் இவற்றை பார்க்கும் இளைய சமுதாயத்தினரின் மத்தியிலும் இவையே பதிவாகுமே..? யானைகளின் வாழ்க்கை முறையை பற்றியும் கொஞ்சம் எடுத்துச் சொல்லியிருக்கலாம்..! இறுதியில் கொம்பன் யானையை கொன்றே தீருவது என்று முடிவெடுத்து இயக்குநர் செய்திருப்பது விலங்குகளின் வாழ்க்கைக்கு மனிதன் தடை போடுவது போலத்தான் உள்ளது..!
ஒரு திரைப்படமாக பார்க்கப் போனால் பசுமை நிறைந்த காட்சிகளையும், அழகான நடிகர், நடிகைகளையும், கடுமையான உழைப்பையும் வைத்திருந்து, மனதைத் தொடும் காட்சிகளையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் கொடுத்திருப்பதால் இந்த கும்கி மாணிக்கம் யானைகளின் மாணிக்கமாகவே தெரிகிறான்..!
No comments:
Post a Comment