Monday, November 5, 2012

சபிக்கப்பட்டவர்களா தமிழர்கள்?- ii


சமகால நிலமைகளை அடிப்படையாகக் கொண்டு சபிக்கப்பட்டவர்களா தமிழர்கள்-பாகம் 2 என்னும் பதிவை எழுதவேண்டியாகிவிட்டது.
“தமிழர்களை இறைவனைத் தவிர யாராலும் காப்பாற்ற முடியாது” என்ற மறைந்த தந்தை.செல்வாவின் வாக்கினை மெய்மைப்படுத்தும் முகமாக செயற்படத் தொடங்கியிருக்கின்றனர் எம்மவர்கள். வந்தோரை வரவேற்பது, விருந்தோம்பல், பண்பாடு, கலாசாரம் என்று அனைத்திலும் முன்னிலையில் திகழ்ந்த நாம் எல்லாவற்றையும் படிப்படியாக இழந்து கொண்டிருக்கின்றோம் என்பது கண்கூடு.
அடுத்தவனையும், மாற்றானையும் குற்றம் சுமத்துவதில் அர்த்தமேதுமில்லை.
எம்முடைய நடத்தைகளாலும் குணங்களாலும் நாம் இழந்து கொண்டிருப்பவை ஏராளம். அண்மையிலே ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லை வாழ் சொந்தங்களிற்கு தமிழர்களை விட ஏனைய இனத்தவர்கள் அதிகமாக உதவியிருக்கின்றனர். நாங்கள் முகப்புத்தகத்திலே தமிழீழம் பேசி வீராப்புக் காட்டுவதிலும் புலம்பெயர் பிரதேசங்களிலிருந்து அர்த்தமற்ற செயற்பாடுகளிலுமே ஈடுபட்டு இலங்கை வாழ் சொந்தங்களிற்கு தொல்லைகளையும் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொண்டு விட்டோம். யாருமே நிஜ வீரர்களாகச் செயற்படத் தயாரில்லையே.
              
முல்லையிலே உதவிப்பொருட்களை வழங்கச் சென்ற போது சிங்களவர்களின் உதவிப் பொருட்கள் அடங்கிய 8 லொறிகள் அங்கே இருந்தன. இவையெல்லாம் சிங்கள மக்களால் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட பொருட்களே தவிர அரசினாலேயோ ஏனையவர்களினாலேயோ அனுப்பப்பட்டதல்ல. புத்தம் புதிய உடுபுடவைகள் மடிப்புக்குலையாமல் இருந்தன, பெட்டி பெட்டிகளாக குழந்தைகளுக்கான பால்மா. உலர் உண்வுப் பொருட்கள்; பிஸ்கட் உட்பட.
இவையெல்லாவற்றையும் தாண்டி மக்களிடம் கேட்டபோது விரல்விட்டு எண்ணக்கூடிய உதவிகளே தமிழர்களால் வழங்கப்பட்டமை புரிந்தது. சிங்களவர்களை இன்னும் ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை என்றாலும் அவர்கள் எமக்கான உதவிகளை வழங்க முன்வந்திருக்கின்றனர். தமிழர்கள் மொத்தமாக செய்த உதவிகளை விட அவர்கள் செய்த உதவிகள் பல மடங்கு அதிகம்.
               
சிங்களவர் எங்களையும் மனிதர்களாகப் பார்க்கின்றனர்; நாம் அவர்களை “சிங்களவனாகவே” பார்க்கின்றோம். நான் சிங்களவனுக்கு சார்பாகவோ தமிழனுக்கு எதிராகவோ பேசவில்லை. எங்களுடையவர்களுக்கு எதுமென்றால் முதலிலே நாம் தானே தோள் கொடுக்கவேண்டும். ஆனால் நாம் சுயநலத்தாலும் பொறாமையாலும் ஆளப்பட்டுக் கொண்டிருப்பதால் மீளப்போவதுமில்லை; மீளவும் முடியாது.
அண்மையிலே பஸ்ஸிலே பயணிக்கும் போது இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம். பஸ்ஸிலே அளவுக்கதிகமாக நகை நட்டோடு பெண்ணிருவர். அவர்கள் இறங்கும் இடம் கிட்ட வந்த போது நடத்துனரிடம் பணம் கொடுத்தனர். அப்போ நடத்துனர் நீங்கள் பயணித்த செலவு அதிகம்;இன்னும் 10 ரூபா தரவேண்டும் என்றார். அவர்களுடைய பதில் பணமில்லை.
நியாயம் என்ன? பயணம் செய்த தூரத்துக்கு பணம் தரவேண்டும், இல்லையா? என்னுள்ளே ஆதங்கம், அவர்கள் போட்டிருந்த நகை ஒன்றப்பறித்து விற்று நடத்துனரிடம் பணத்தை வழங்க வேண்டுமென்று. ஆனால் காலமும் இடமும் சம்மதிக்காதல்லவா?
தமிழனுடைய உழைப்பையே தமிழன் சுரண்டும் போது நாம் அடுத்தவனை குற்றம் சுமத்த முடியுமா.
              
அடுத்து தம்மையெல்லாம் தமிழர்களின் த(லை)லமைகள் என்று கூறிக்கொள்ளும் எல்லாம் சேர்ந்தால் எமக்கு விடுவு அல்லாவிட்டால் தீர்வு கிடைத்து விடுமல்லவா. இது எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தெரியும். ஆனால் அதனைச் செய்ய அவர்கள தயாரில்லை. ஏனேனில் தீர்வு கிடைத்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை அஸ்தமனமாகி விடுமே? இவர்கள் இருக்கும் வரை காலம் காலமாக இழுபட்டு தமிழர் பிரச்சனை நூற்றாண்டு ஒன்றக்கடந்தாலும் எமக்கு விடுதலை இலகுவில் கிடைத்துவிடாது.
எம்முடையவனை தட்டிக்கொடுக்க எம்மவர்கள் தயாரில்லை, அதனாலே வீழ்கின்றோம். அடுத்தவன் வீட்டு அடுப்பெரிந்தால் மற்ற வீட்டுக் காரனுக்கு வயித்தெரிச்சல். இப்படியாக இருக்கும் போது நாம் எங்கே விடுதலை பெறுவது. பெற்று விட்டாலும் அதை யார் அனுபவிப்பது. இப்படியான சிக்கல்கள் எம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றது. சிந்திக்க வேண்டும். தமிழன் தமிழனாக வாழ தலைவிதியை தீர்மானிக்க நாம் ஒட்டுமொத்தமாக நல்ல முறையிலான மாற்றத்தை எதிர்பார்ப்போம்.
மற்ற இனத்தவர்களுக்குள்ளும் வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இல்லை. அளவோடு இருக்கின்றது. வேற்றுமைகள், பிரச்சனைகளிற்கு அப்பாலே ஒற்றுமை இருக்கின்றது.
நாளை விடியும் பொழுது நமக்காகவேண்டுமானால் நம்மை நாமே மாற்றிக்கொள்வோம்.

No comments:

Post a Comment

பிரபல்யமான பதிவுகள்