Sunday, November 18, 2012

வேங்கை மண்ணில் குருளைகள்.


கடந்த வாரம் இடவேண்டிய பதிவு நேரமின்மை காரணமாக இன்றே நிறைவேற்றப்படுகின்றது. முல்லைத்தீவு பின்பு யாழ்ப்பாணம், கொழும்பு மீண்டும் முல்லைத்தீவு என்று மாறி மாறி சென்றதன் பிற்பாடு கிடைத்திருக்கும் சொற்ப நேரத்தில் இந்தப் பதிவை இடுகின்றேன்.
சொந்தப் புகழிற்கோ அல்லாது நாங்கள் செய்ததை தம்பட்டம் அடிப்பதற்காகவோ இதை இடவில்லை. நாம் என்ன செய்கின்றோம் என்னும் வினாவை எழுப்புபவர்களிற்கும், இன்னொரு இரண்டு வருடங்களிற்குப் பின் நாம் கடந்த காலத்தில் என்ன செய்தோம் என்று பார்ப்பதற்குமேற்ற ஒரு ஆவணமாக இதை இடுகையிடுகின்றேன்.
               
தமிழன் வந்தோரை வரவேற்கும் இனம், அப்படி இப்படியெல்லாம் பெருமைப் பட்ட இனம். சொந்தக் காட்டிக்கொடுப்புகளாலும் பதவி ஆசைகளாலும் சிக்கி சின்னாபின்னப்பட்டு நடுத்தெருவிலே வந்து நிற்கின்றது. யாழ்ப்பாணத்தானிற்கு ஒன்றென்றால் வன்னியர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். உடனடியாக உயிரையும் தந்து உதவி செய்வர். அதே போலத் தான் ஏனைய பிரதேசத் தமிழர்களும். வடக்கு உணவு பஞ்சத்திலே போராடிய போது கொழும்புத் தமிழர்கள் செய்த உதவிகள் அவ்வளவு எளிதில் மறக்கப்பட முடியாதது. அப்படியாக இருக்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பாதிக்கப் பட்டவர்களிற்கு உதவ முடியவில்லையே என்று தவித்தவர்கள் பலர்.
அதன் பின்பு சொந்த இனமே சொந்த இனத்தை அடிக்க, மாற்றினம் தலையிலேறி இருந்து அடிக்க, இயற்கையும் சின்னாபின்னப் படுத்த துவண்டு போனவர்கள் எம்மவர்களே.
               
காலம் பார்த்து காத்திருந்தவர்களிற்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மழையாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்னும் பேரிடி கலந்த செய்தி கிடைத்தது. உடனே மாறி மாறி அழைப்புகள் பறந்தன. வலி.தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனமா, இல்லாவிட்டால் மானிப்பாய் பரிஷ் லியோக் கழகமா இந்த நற்கைங்கரியத்தை மேற்கொள்வது என்பதில் போட்டியின்றி மானிப்பாய் பரிஷ் லியோக் கழகம் இந்தப் பொறுப்பை கையிலெடுத்தது. விரைவாக செயற்படத் தொடங்கினர். பாடசாலைகள், வர்த்தக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகளிற்கு நேரிலும் கடிதமுமாக தகவல்கள் பரிமாற்றப்பட்டு செயற்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன.
               
சென்ற பாடசாலைகளிளெல்லாம் மிகப்பெரும் வரவேற்பு; தம்பி இது காலத்தின் தேவை, எங்கடையாக்கள் இதைத்தானே செய்யோணும், அவை செய்யாட்டிலும் நீங்கள் செய்யுறியள்; ரொம்ப சந்தோசம். இதை ஒரு பாடசாலை அதிபர் சொன்னார்.
மாணவர்கள் கூட தங்களாலியன்ற உதவிகள் செய்தார்கள். ஆசிரியர்கள் தங்களாலியன்ற உதவிகளை மனப்பூர்வமாகச் செய்தார்கள். வர்த்தக நிறுவனங்கள் தங்களது அன்றைய நாளின் வருமானத்திலே பொருட்களை தந்தார்கள். ஆரம்பத்திலே செயற்படத் தொடங்கிய உறுப்பினர் எண்ணிக்கை இறுதிக் கட்டத்தை அடைகின்ற போது அதிகரிக்க தொடங்கியது. எங்களை எங்களாலே நம்ப முடியவில்லை. இவ்வளவு பொருட்களை நாம் சேகரித்தோமா என்பது இன்று வரை நம்ப முடியாததாகி விட்டதே.
               
பதவியேற்று முதலாவது செயற்திட்டத்திலே சுபா சிறப்பாய் செயற்பட்டிருக்கின்றார். அவரோடு முதலாம் உப தலைவரும் வலி.தென்.மேற்கு பிரதேச சபை தவிசாளருமான ஜெபநேசன் அண்ணா, சுஜி, ருக்கேஷ் இவர்கள் தான் ஆரம்பத்திலே முன்வந்து செயற்பட்டவர்கள். பெண்கள் கூட தாம் சளைத்தவர்கள் என்றில்லாது தமது கட்டுப்பாட்டிற்கேற்றா வகையிலே ஒத்துழைத்தனர்.
பெரதெனியாவில் இருந்து முன்னாள் தலைவர் செந்தில் அண்ணா கூட தன் ஆலோசனைகளை இடையிடையே பகிர்ந்தார்.
செயற்திட்டத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்குகையில் இணைந்து கொண்ட கஜிதாப், கஜன், தர்சிகன், மயூ தங்களது பங்களிப்புகளையும் சிறப்பாக வழங்கினர்.
பொருட்களெல்லாம் சேர்த்தாயிற்று. எவ்வாறு பொதி செய்வது, எவ்வாறு முல்லைத்தீவிற்கு கொண்டு செல்வது என எண்ணத் தொடங்கையிலே சிக்கல் ஆரம்பமாகியது. வாகனத்திற்காக தெரிந்த அறிந்த எல்லோரிடமும் கேட்டோம் அவர்கள் சொன்ன தொகை எமது சக்திக்கப்பாற்பட்டதாகவே இருந்தது.
               
கைக்கெட்டியது வாய்க்கெட்டுமா என்று கையாலாகத நிலை. ஒவ்வொரு நொடிகளும் கடக்க கடக்க விறுவிறுப்பும் பயமும் அதிகமாயிற்று. பாதிக்கப்பட்ட மக்களிற்காக சேகரித்த பொருட்களை உரிய காலத்திலே உரிய முறையில் வழங்கவேண்டும். எல்லோருமாக மண்டையை போட்டு பிய்த்து கொண்டிருக்கையில் கஜிதாப் தான் வாகன வசதிகளை ஒழுங்கு செய்வதாக சொன்ன போது அப்படியே அமைதி. சொன்ன மாரியே செய்து தானே வாகனத்தையும் செலுத்தி முக்கிய தருணத்தில் சாதித்துக் காட்டிய கஜிதாப்பிற்கு சபாஷ்.
பல்வேறு குத்துவெட்டுகளிற்குப் பின் மூல்லைத்தீவு அரச அதிபரிடம் தொடர்பு கொண்டோம். அவர் எங்களைச் செவிமடுத்து நல்லதொரு வரவேற்பைத் தந்தார். முல்லைத்தீவு ஆனந்த புரம் பகுதியை எமக்காக ஒழுங்குபடுத்தினார்.
பயண ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தி. இன்னும் பொதியிடல் ஆரம்பிக்கப்படவில்லை. நாளை விடிந்தால் பயணம் ஆரம்பம். ஆனால் தற்போது மாலை 2.30மணி இருக்கும். 450 குடும்பங்களிற்கான பொதிகள் தேவை. இவ்வாறான வேளையில் இணைந்தவர் தான் கானு. எதுக்கென்றாலும் தாமதமாகத் தான் வருவான். லேட்டா வந்தாலும் ரொம்ப லேட்டஸ்ட் ஆனவர். கானு, மயூ, தர்ஷி, கஜன், சுஜி, ருக்கேஷ், சுபா, தர்சன் இவர்களோடு மகளிர் படையும் அற்புதமாக பணியாற்றினர். எல்லாம் பொதி செய்து முடிக்கையில் நள்ளிரவைத் தாண்டி விடிந்துகொண்டிருந்தது.
இடையிடையிலே கிடைத்த சுபாவின் கறிபணிஸூம், அனோச்சி வீட்டிலிருந்து கிடைத்த கேக்கும், அம்மாவிடமிருந்து கிடைத்த கோப்பியும் எல்லோர் களைப்பையும் இல்லாமல் ஆக்கி உற்சாகம் தந்துகொண்டிருந்தது.
எல்லாம் சரி பொழுது விடிந்து கொண்டது. சில மணி நேரத்தூக்கத்தோடும் மிகப் பலமான எதிர்பார்ப்போடும் ஆரம்பித்த பயணம் கழகத்தின் ஆலோசகர் சாந்தன் சேரின் இணைவோடு வலுப்பெற்றது.
               
பொதிகளை வைக்கவே இடமில்லாததால் ஆசனத்திலிருக்கும் ஒருவரது மடியிலே இருவர் மூவர் என்று அமர்ந்துகொண்டனர். முல்லை மக்களை சந்திக்கும் ஆவலில் இந்தத் துன்பங்களெல்லாம் மறைந்தே போயின. ஒருவாறாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கும் சென்றாயிற்று. பிரதேச செயலரின் அன்பான வரவேற்பும், பிரதான கிராம சேவகரின் பேச்சும் எம்மை வசப்படுத்த ஆனந்த புரத்திற்கான பயணம ஆரம்பமாயிற்று.
ஆனந்தபுரம் அ.த.க அபாடசாலைக்கு அருகிலுள்ள கிராமசேவகர் அலுவலகம் இல்லை இல்லை நான்கு தகரங்கள் போடப்பட்ட கூரை மட்டுமே. அங்கு பதிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.
               
கூட்டத்திருந்து புறப்பட்ட தேனிகள் போல லியோக்கள் அனைவரும் அருகிலிருந்த பாடசாலைக்கு சென்று அதிபரின் அனுமதியோடு மாணவர்களோடு இணைந்து கொண்டோம். முதலிலே அவர்களுக்கு ”ஐஸ்” வைப்பதற்காக பிஸ்கட், இனிப்பு எல்லாம் கொடுத்தாயிற்று.   
அடுத்து அவர்களோடு பேசி உளநலன்களை அறிந்து கொண்டோம். மறு புறத்திலே ஏனைய லியோக்கள் பொதிகளை பிரித்துக்கொண்டிருந்தனர். சிலர் ஆசிரியர்களாக மாறி மாணவர்களின் சந்தேகங்களிற்கு விடை தந்தனர். இன்னும் சிலர் அப்பிரதேசத்தைச் சுற்றி யுத்ததின் தடங்களை, தடயங்களை தேடிச் சென்றனர்.
பதிவும் முடிய இடைவேளை மணியும் ஒலித்தது. எனவே மக்களிற்கு உதவிப்பொருட்கள் வழங்கும் குழுவோடு நாமும் இணைந்து கொண்டோம்.
ஜெபா அண்ணா கழகம் பற்றியும் செயற்திட்டம் பற்றியும் விளக்கிக் கூற மக்களிற்கான உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.
               
சின்ன ஆர்வக்கோளாறினால் நானும் இன்னும் சிலரும் மீண்டும் வகுப்பறைகளில் சரணடந்தோம். நேரம் போவதே தெரியாது ஓடிக்கொண்டிருக்க மறு புறத்திலே ஆடை விநயோகமும் இடம்பெற்றது.
               
ஒருவாறு பாடசாலை மணி ஒலிக்க ஓய்விற்கு வந்தோம். மதிய உணவை அருந்துவதற்கு முன் சிறுவர்கள் எங்களை அழைத்துச் சென்று கிளிச்சொண்டு மாங்காய் தந்தனர். மாங்காயை விட அச் சிறுவர்களின் உணர்வு ரசிக்கத்தக்கதாய் இருந்தது.
மதிய உணவின் பிற்பாடு போர் நூதனசாலை, பறா-3 கப்பல், தலைவரின் வீடு இவற்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆயுதங்களின் தொழில்நுட்பம் உண்மையிலே வியப்பைத்தந்தது.
எரிந்து குற்றுயிராய் கிடக்கும் வாகனங்களின் இயந்திரங்கள் கழற்றப்பட்டு தென்னிலங்கைக்கு ஏற்றப்பட்டு முண்டம் போல் கிடந்தன. எஞ்சிய இரும்புகளும் சீருடையினரால் வாகனங்களில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. சில இடங்களில் இது ”ரானுவத்தின் சோத்து” இவ்வாறு இருந்தது. அடிக்கொரு புத்தர் சிலை. மக்கள் வீட்டில் மின்சாரம் இருக்கின்றதோ இல்லையோ புத்தரிற்கு மட்டும் பகலிலும் விளக்குகள் ஒளிர்ந்தன.
               
ஒருபுறம் மிகப்பெரும் சுமைய இறக்கிய உணர்வோடும் மறு புறம் எதையோ இழந்த உணர்வோடும் யாழ் நோக்கி ஓடிய வண்டியோடு ஓடிக்கொண்டிருந்தது என் உணர்வுகளும்; மீண்டும் நாம் தலை தூக்க முடியாதா என்று……
*தகவல்களுக்கு ஏற்ற படங்கள் இல்லமைக்கு மன்னிக்கவும். நான் புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை.
மேலதிக புகைப்படங்களிற்கு இந்த இணைப்பை அழுத்துங்கள்.



4 comments:

  1. நல்லது உஷாந்தன்.வாழ்த்துக்கள் .எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையும் உடைத்தெறிந்து உங்கள் சமூக சேவை தொடரட்டும் .தங்கள் ஏக்கம் கடந்த காலங்கள் எங்களுக்கு கிடைக்காத என்று நிச்சையம் கிடைக்கும் எமதுய் அடுத்த தலை முறை நிம்மதியாக வாழ நாங்கள் தான் உழைக்க வேண்டும் ஓன்று பட்டால் நிச்சையம் நடக்கும் .மறுபடியும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. @thas எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றோம்

    ReplyDelete

பிரபல்யமான பதிவுகள்