Saturday, October 6, 2012

டீலா, நோ டீலா? T-20 உலககிண்ணம்-2012.


எதிர்பார்ப்புக்கள், ஆரவாரங்கள், கருத்துக் கணிப்புகள்,ஊகங்கள் இவை அனைத்தையும் தாண்டி உலகக்கிண்ண T-20 போட்டிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றன. போட்டித்தொடர் ஆரம்பமானதற்கு முன்னதே எதிர்பார்க்கப் பட்ட இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிகளில் மோதவுள்ளன.
இன்னும் 20 வருடங்களுக்கு இலங்கையில் எந்த வித உலகக்கிண்ணப் போட்டிகளும் இல்லை என்பதால் ரசிகர்கள் போட்டிகளைப் பார்க்க முந்தியடிக்கின்றனர். இலங்கை அணி இறுதிப் போட்டிக்கும் வந்திருப்பதால் அவர்களுக்கு மிகப் பலமான ரசிகர்களின் ஆதரவு காத்திருக்கின்றது. சொந்த மைதானம் என்பதாலே சாதிக்கும் வாய்ப்பு இலங்கைக்கு அதிகம்.
முதலாவது அரையிறுதியில் இலங்கை ஓட்டங்களைக் குவிக்கத் தடுமாறியமையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.வழமையாக அடித்தாடுகின்ற டில்ஷான் 43 பந்துகளில் 35 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். ஒரு T-20 போட்டியின் போது எதிர்கொண்ட பந்துகளை விட ஓட்டங்களை குறைவாகப் பெற்றால் என்ன நிலை என்பது அனைவரும் அறியாததில்லை.
                          
 மிகப் பெரும் பொறுப்பு டில்ஷானிடம் காத்திருக்கின்றது இறுதிப் போட்டியில். ஆனால் அன்றைய அரையிறுதியில் முக்கியமான தருணங்களில் 10பத்திற்கும் மேற்பட்ட ஒற்றை ஓட்டங்களை கட்டுப்படுத்தியதோடு, அசத்தலான களத்தடுப்பையும் மேற்கொண்டார்.

மஹேல, இலங்கைக்கு கிடைத்திருக்கின்ற மிகப் பெரும் துடுப்பாட்ட தூண், அணித் தலைவராக குழப்பமில்லாது மைதானத்திலும் மைதானத்திற்கு வெளியிலும் சாதித்துக் காட்டியிருக்கின்றார். துடுப்பாட்டம்+ அணித்தெரிவு(ஹேரத்தின் வருகை) + ஒவ்வொரு ஓவர்களிற்கும் பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தியமை கிண்ணம் வெல்லும் நம்பிக்கையினை அதிகப் படுத்தியிருக்கின்றது.
சங்கா, துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக பெரிதாக சாதிக்கா விட்டாலும் விக்கட்காப்பிலே தனிக்காட்டு ராஜாவே.பாக்கிஸ்தானுடன் பெறப்பட்ட ஸ்டம்ப் மூலமான விக்கட்கள் வெற்றியின் அடித்தளம்.
                                  
மலிங்க, என்னவோ எதோ என்று முக்கியமான நேரங்களில் பிடியை தவறவிட்டு விட்டு பாக்கிஸ்தான் துடுப்பாட வீரர்களோடு பந்தாலே பேசியிருக்கின்றார். வாழ்த்துக்கள்,

திசார பெரேரா இறுதி ஓவர்களில் அடித்த பலமான அடிகளும், மத்யூஸ்+ஹேரத்தின் பந்து வீச்சுப் பெறுதிகளுமே இலங்கையின் வெற்றியின் பின்னால். குலசேகர+மலிங்க கூட சிக்கனமான பந்துவீச்சுப் பெறுதிகளை பதிந்திருந்தனர்.
மிகப் பெரிய பாக்கிஸ்தான் துடுப்பாட்ட படைக்கு மிகச் சிறந்த அச்சுறுத்தலை வழங்கி போட்டியை இலங்கை பக்கம் பறித்தெடுத்த பெருமை பந்துவீச்சாளர்களுக்கும்,ஒட்டு மொத்த இலங்கை அணியினரிற்குமே.
                                 
இதுவரை பெரிதாக எதிர்ப்புக்கள் எவற்றையும் சந்திக்காது மேலேறி வந்த இலங்கை அணி அரையிறுதியில் மிகப் பெரும் சவாலை எதிர் கொண்டு வெற்றியீட்டியிருக்கின்றனர்.
பல இந்திய ரசிகர்களுக்கும் + இலங்கை எதிர்பாளர்களுக்கும் வயிற்றிலே புளியைக் கரைத்த விடயம் வெறும் 139 ஓட்டங்களை மட்டுமே ஒரு T-20 போட்டிகளில் பலமான துடுப்பாட்ட வரிசை கொண்ட அணிக்கெதிராகப் பெற்று அவ் ஓட்ட எண்ணிக்கையினை கொண்டு போட்டிகளில் வெற்றியீட்டுவதுமே. என்ன தான் இருந்தாலும் அணி ஒற்றுமை, அடக்கமான தன்மை என்பவற்றிற்கு ஒரு சல்யூட்.

                            
பந்துவீச்சுத் துறையில் ஆதிக்கம் செலுத்திய பாக்கிஸ்தான் அணியினுடைய துடுப்பாட வீரர்கள் போராடத் தவறியமையே இறுதிப் போட்டிக்கு அவர்கள் வரமுடியாமல் போனதற்கு காரணம். பூம் பூம் அப்ரிடி ஏனைய அணிகளை கிலி கொள்ள வைத்து அதிரடிகள் காட்டிய காலம் மலையேறி விட்டது.உமர்குல் தன் அதிரடிகளை காட்ட சந்தர்பமேதும் வரவேயில்லை.
               
இரண்டாவது அரையிறுதியில் கெய்ல்&பொலார்ட் அடித்த அடிகள் அவுஸ்ரேலியாவின் மரண அடிகளே. கங்காருக்களின் காலம் கடந்து போயே விட்டது. 14 ஆறுகள், 13 நான்குகள் முடியாதப்பா. எல்லாவற்றையும் விட டொஹேர்ட்டியின் இறுதி ஓவரில் பொலார்ட் அடித்த தொடர்ச்சியான இமாலய ஆறுகள் கங்காருகளின் கிறிக்கட் வாழ்வின் பெரும் அடிகள். வட்ஷன், வார்ணர், ஹசி துடுப்பாடத்தில் ஏமாற்றியமை அவுஸ்ரேலியாவின் இறுதிப் போட்டிக் கனவை இழக்கச் செய்திருக்கின்றது.
                            
என்ன தான் இருந்தாலும் இதுவரை T-20 உலக கிண்ணத்தை ஒருமுறையேனும் வெல்லாத இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக் களத்தில். சொந்த மைதானம், ரசிகர்களின் ஆதரவு, போர்மில் இருக்கும் துடுப்பாட வரிசை, பந்து வீச்சாளர்களின் தொடர்ச்சியான அசத்தல் என்பன இலங்கை அணிப்பக்கம் சாதகமானவை.

கெய்ல் என்னும் தனி மனிதனோடு பொலார்ட் இணைந்திருப்பது மேற்கிந்தியாவின் பக்கம் போட்டியை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தவிர அணித்தலைவர் டரன்சமி வீழ்ந்துகிடந்த வேஸ்ட் இண்டியா (WASTE+INDIA)வை என்னவாக ஆக்கப்போகின்றார் என்பதற்கு காத்திருக்கலாம்.

முன்னதாக சுப்பர்-8 ஆட்டமொன்றில் இலங்கை அணியினரால் மேற்கிந்தியா வாரப் பட்டிருக்கின்றது. மேற்கிந்தியர்கள் பழிக்கு பழி தீர்ப்பார்களா?, இல்லை இலங்கையின் வெற்றிப் பயணம் தொடருமா? பல்லேகல அடிகள் கொழும்பிலும் தொடருமா?
                           
கெய்ல்ஸின் நடனம், அதிரடிகள், மலிங்கவின் மாயாஜாலங்கள், பலமான அணித்தலைவர்களிற்கிடையான மோதல், டில்ஷானா இல்லை கெய்ல்ஸா என்கின்ற ஆதங்கங்களுக்கும் பதில் கிடைக்கும்வரை….
                 
          

No comments:

Post a Comment

பிரபல்யமான பதிவுகள்