Saturday, August 4, 2012

அகலத் திறந்த வழிகள்..(எம்மவர்களின் எதிர்பார்ப்பு)


நல்லவையேதும் நமக்கு ஏற்படவேண்டுமெனில் நம்மை நாமே தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதும் முயற்சி திருவினையாக்கும் என்பதும் எம்மவர்களின் வரலாறு.
முயற்சிக்காது எம்முடைய திறமைகள் வெளிக்கொணரப்படவில்லை என ஆர்ப்பரித்துப் புலம்புவதில் அர்த்தமில்லை.


தாத்தா கிளித்தட்டு மறித்த காலம் போய் பல நவீன விளையாட்டுக்கள் எம்மிடம் புகுந்து விட்டன. நவீன விளையாட்டுகள் நிலைந்த காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

முன்பெல்லாம் இலங்கையினை அடையாளப்படுத்த முற்படுகையில் இந்தியாவிற்கு அருகில் உள்ள ஓர் தீவென்றோம். அக்காலம் மாறி விளையாட்டால் அதுவும் குறிப்பாக கிறிக்கட்டால் இலங்கை அறியப்படுகின்ற காலம். அந்தளவிற்கு நாட்டிற்கு பெருமை சேர்க்கும் கிறிக்கட்டில் சொல்லும் படியாக தமிழர்கள் இல்லை.
                                   
முத்தையா முரளிதரன், ரசல் ஆர்னல்ட் , அஞ்சலோ மத்யூஸ், திலகரட்ண, மொஹமட் டில்ஷான் ஆகியோர் தேசிய அணியில் இடம்பெற்றிருந்தனர். முரளி இந்திய வம்சாவளித்தமிழனாக பல சாதனைகளைப்படைத்து ஓய்வு பெற்றுள்ளார். அது போலவே ரசல் ஆர்னல்ட் கூட சிலகாலம் இலங்கைகாக சாதித்தது வரலாறு. அஞ்சலோ மத்யூஸ் சமீப காலமாக இலங்கைக்காக சிறப்பாக விளையாடி வருகின்றார்.
ஏன் தமிழ் பேசும் பகுதிகளில் குறிப்பாக வடக்கு ,கிழக்கிலிருந்து தேசிய அணிக்காக ஒருவரும் தெரிவாகவில்லையே என்று எண்ணி ஆதங்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.காரணத்தை நோக்குகையில் கிறிக்கட்டிற்கு திறமைக்கு சரிசமனாக அதிஸ்டமும் தேவை. தவிர எம் வீரர்கள் அறியப்படக்கூடிய / தெரிவாளர்களின் கண்களில் படக்கூடிய சாத்தியமின்மையை கடந்து வந்த சோகமான காலங்கள் எமக்கு பரிசளித்திருக்கின்றது.

அவையெல்லாம் மாறி மாவட்ட , மாகாணப் பயிற்றுனர்களாக தேசிய அணியினை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் சிறப்பாக செயலாற்றிக்கொண்டிருக்கின்றனர். தனியே பயிற்சி மட்டும் போதாது. நுட்பங்களால் தான் பல விடயங்களை சாதிக்க முடியும். அவையெல்லாவற்றினையும் எம் மண்ணின் வீரர்களுக்கு வழங்கும் ஒரு உன்னத பணி ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
 UR FRIEND FOUNDATION நிறுவனம் சொல்லும் படியாக பல விடயங்களை வடக்கில் செயற்படுத்தி வருகின்றது. கல்வியை தாண்டி விளையாட்டிற்கும் புத்துணர்வூட்டி தேசிய அணியில் எம் மண்ணின் வீரர்களை காணும் கனவோடு பல செயற்திட்டங்கள் மேற்கொண்டு வருகின்றது.
                                
கடந்த மாதம் இலங்கையின் பிரபல பாடசாலையான றோயல் கல்லூரியுடன் யாழ்.மாவட்டத்தின் சில பாடசாலைகளின் கூடைப்பந்தாட்ட அணிகளுடன் போட்டியிடும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அதனுடைய தொடர்ச்சியாக இலங்கை கிறிக்கட் சபையுடன் இணைந்து மாணவர்களின் திறமைகளை பட்டை தீட்டும் கைங்கர்யம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதில் மிகுந்த மன நிறைவு.
                               
                          
மூன்று நாட்களாக 31ம், 01ம், 02ம் திகதிகளில் புனித. பத்திரிசியார் கல்லூரி மைதானத்திலே இப் பயிற்சி முகாம் இடம்பெற்றது. வடமாகாணத்தின் யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின் கடினப்பந்து (leather ball) விளையாடும் பாடசாலைகளை சேர்ந்த  சேர்ந்த சுமார் 300ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இப் பயிற்சி முகாம் முற்று முழுதாக இலங்கை கிறிக்கட் சபையின் பயிற்றுவிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும்.

                                        
இலங்கை கிறிக்கட் சபையின் பயிற்றுவிப்பாளர்களுடன் கலந்துரையாடிய போது மற்றொரு முக்கிய விடயத்தினையும் அறிய முடிந்தது. 9 மாகாணப் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் எல்லோரும் இதற்கு முற்பாடு எங்கும் ஒருங்கு சேர்ந்து யாரிற்கும் பயிற்சி முகாம் நடத்தியதில்லை. அந்தளவிலே இவற்றினை இவ்வளவு சிறந்த பயிற்றுனர்கள் எல்லோரையும் அழைத்து வந்த UR FRIEND FOUNDATION நிறுவனத்தினரின் முயற்சிகளுக்கு முதலிலே வாழ்த்துக்கள்.
                             
அதனையும் தாண்டி மாணவர்களின் மனநிலையினை அறிந்த போது இதுவரை தங்களின் கனவாக மாவட்ட அணியே இருந்தது. ஆனால் இலங்கை தேசிய அணியில் விளையாட வேண்டும் என்னும் கனவும், அதற்காக தாங்கள் பட்டதீட்டப்பட்டிருப்பதை உணர்வதாகவும் சொன்னார்கள். நிற்சயமாக மகிழ்ச்சியினை தரக்கூடியதொரு விடயம்.
                       
அதனை விட பயிற்சி முகாமின் போது இலங்கை கிறிக்கட்டின் உப தலைவர் கே.மதிவாணன் கலந்து கொண்டிருந்ததை அவதானித்த போது இலங்கை தேசிய அணியில் தமிழ் வீரர்களை காண்பதிலே UR FRIEND FOUNDATION நிறுவனத்தினர் எந்தளவிற்கு ஆர்வமாகவும், தீர்க்கமாகவும் இருக்கின்றனர் என்னும் நிலை புரிந்தது.
                              
மேலும் சுழற்பந்தின் உலக நாயகனும், இலங்கை அணியின் முன்னாள் உப தலைவருமான முரளியையும், துடுப்பாட்டத்திலும் விக்கட் காப்பிலும் அசத்தும் இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவையும்  கிறிக்கட்டிற்கு அறிமுகப்படுத்திய சுனில் பெர்ணாண்டோ தலைமையில் இலங்கை தேசிய அணியினை பிரதிநித்தித்துவப்படுத்தியவரும் வட மாகாணப்பயிற்றுனருமாகிய ரவீந்ர புஷ்பகுமார, தேசிய அணியினை பிரதிநித்தித்துவப்படுத்திய மற்றொருவரான லங்கா டீ சில்வா மற்றும் டர்ஷன கமகே, மஞ்சுள கருணாரட்ண, சிடார்த் பெர்ணாண்டோ, சமிந்த கொடிகார, ரோஹித் பெரேரா, நிரோஷன் பண்டாரதிலக, ஆகியோர் யாழ்.மாவட்டத்தின் ஓய்வு நிலை பயிற்றுவிப்பாளர் சண்முகலிங்கம் (சண் சேர்) ன் வழ்காட்டலில் தற்போதைய மாவட்ட பயிற்றுனர் லக்‌ஷிதவுடன் இணைந்து சிறப்பாக பயிற்றுவித்தனர்.
            
பயிற்சியின் நிறைவிலே பங்கு கொண்ட மாணவர்களுக்கு UR FRIEND FOUNDATION நிறுவனத்தின் தலைவர், இலங்கை கிறிக்கட்டின் உப தலைவர் கே.மதிவாணன், பங்கு கொண்ட பயிற்றுனர்கள் அனைவரதும் கையொப்பத்துடன் கூடிய பெறுமதியான சான்றிதழ் வழங்கப்பட்டமை மாணவர்களின் வரப்பிரசாதமாகும்.
1996ம் ஆண்டு உலககிண்ணத்தினை இலங்கைக்கு வென்று கொடுத்த அணியில் விளையாடிய ரவீந்ர புஷ்பகுமார, சிடார்த் பெர்ணாண்டோ, லங்கா டீ.சில்வா, நிரோஷன் பண்டாரதிலக, டர்ஷன கமகே ஆகியோர் கலந்து பயிற்றுவித்ததோடு, 5 வீரர்களை தேசிய அணிக்கு விளையாடக்கூடும் என இனம் கண்டமை எமக்கு நம்பிக்கை தருகின்றது.
                                 
                                 
அந்த ஐவரும் இப்போது 15வயதினிலிருப்பதனால் மேலும் பயிற்சி பெறும் பட்சத்தில் திறமைகள் வெளிக்கொணரும் சந்தர்ப்பம் அதிகமாகும்.
மேலும் பயிற்சியின் இறுதி நாள் இரு அணிகள் தெரிவு செய்யப்பட்டு போட்டியொன்றும் இடம்பெற்றது. இப்போட்டியின் அடிப்படையில் 15 பேர் கொண்ட அணி தெரிவுசெய்யப்பட்டு மேலும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
                                

ஆனால் இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை போல கிடைத்த சந்தர்ப்பங்களை சில பாடசாலைகள் வீண்விரயம் செய்தமை ஏனைய வீரர்களின் பங்குபற்றலினை தடுத்திருக்கின்றது. இவ் நிலை மாறவேண்டும்.
                              
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாகப்பயன் படுத்தி மேலும் முன்னோக்கி வரவேண்டியது காலத்தின் தேவை. சந்தர்ப்பம் இல்லை புறக்கணிக்கப்படுகின்றோம் என வாய் கிழிய கத்தியவர்களுக்கு நல்ல பதில் தந்திருக்கும் இவ்வாறான பயிற்சி முகாம்கள் எமது பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்றால் எமது வீரர்களிற்கு நல்லதொருவாய்ப்பாக அமையும் என்றார் பெற்றார் ஒருவர்.
சந்தர்ப்பங்கள் என்றும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. திறமைக்கு அதிஸ்டமும் தேவை.
நல்லதொரு தேசிய கிரிக்கட் வீரனை தமிழ்பேசும் வடக்கு கிழக்கிலிருந்து எதிர்பார்த்து…..
                                                
                                     

                                   

No comments:

Post a Comment

பிரபல்யமான பதிவுகள்