
அந்த வகையில் கடந்த 21ம் திகதி வெளியிடப்பட்ட திரைப்படம் தான் “இனி அவன்”.
பல்வேறு எதிர்பார்ப்புகள், யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்புகள் இடம்பெற்றமை, நண்பர்கள் சிலர் அந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தமை/ பணியாற்றியமை, அத்தோடு திரைக்கதை இவை இத்திரப்படத்தை பார்க்கும் ஆவலை உந்தித்தள்ளின. கால நேரம் கூடாமையாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் முதற்காட்சியாக பார்க்க முடியாது போய் விட்டது.
நல்லவேளை முதற்காட்சியாகப் பார்க்கவில்லையே என்று படத்தை பார்த்த பின்பு எண்ணி மகிழ்ந்தேன்.
காலம் காலமாக தமிழர்களின் வரலாறுகள், அவை சார் உண்மைகள் திரிபுபடுத்தப்படுவதும், உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுவதும் பெரும்பான்மையினரால் அரங்கேற்றப்பட்டே வருகின்றன. இத் திரைப்படத்திலும் சிறப்பாக திரிவுபடுத்தலையும், உண்மைகளை குழி தோண்டிப்புதைத்திருப்பதிலும் இத்திரைப்படத்தின் இயக்குனரும், கதைக்கு சொந்தக்காரருமான அசோக ஹந்த்கம தானும் பெரும்பான்மையினர் என்பதை நிரூபித்திருக்கின்றார்.
ஒரு சில காட்சிகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருப்பதோடு நடக்காத பல சம்பவங்கள் நடந்ததாகக் காட்டப்படுவதிலே இயக்குனரின் கற்பனைத் தன்மை களைகட்டியிருக்கின்றது. இக் காட்சிகள் பேரினவாதிகளிற்கு மகிழ்ச்சியினை தருவதற்காகவும், அவர்களின் ஆதரவுகளைப் பெறுவதற்காகவுமே வலிந்து இணைக்கப்பட்டிருப்பதாகவே ஊகிக்கமுடிகின்றது.
காலங்காலமாக தமிழர்களின் வாழ்வையே வைத்து பிளைத்த பல இயக்குனர்களோடு அசோக கந்தகமவும் இணைந்துள்ளார்.
ஆனால் காட்சி அமைப்புகளிலே வடபுலத்தின் பிரதேசங்களிலே உள்ள இடங்களிலே அமைக்கப்பட்டுள்ள விதம் மிகப்பிரமாதமாகவே உள்ளன.
விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் முழு நீளத்திரப்படங்களே வெளியாகியுள்ள இலங்கையில் இந்திய சினிமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு இப்படத்தினை பொறுத்தளவில் ஒப்பீடு கடந்த பார்வை எம்மவர்களை வளர்க்க உதவும். ஏனெனில் சினிமா தொழில்நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையில் இவ்வாறானதொரு முயற்சி நிற்சயம் வரவேற்கப்படவேண்டியவையே.
தமிழர்களின் போராட்டம் திரைப்படம் முழுவதுமே கொச்சைப்படுத்தப் பட்டுள்ளது.

இறுதிப் போரிலே பிரபாகரன் செத்த போது நீ மட்டும் ஏன் தப்பினாய் என்று கதாநாயகனைப்பார்த்து கடைக்காரர் கேட்பதிலும்,
சாரதிப்பயிற்சிகாக கடைக்காரனிடம் 20,000 கேட்கும் போது கப்பமா கேட்கின்றாய் என்பதிலும் வெந்தபுண்ணிலே வேலைப் பாய்ச்சியிருக்கின்றார் இயக்குனர்.
இதன் மூலம் தமிழர்கள் நாட்டுக்காக போராடவில்லை உணர்வுகளுக்கும், உரிமைகளுக்காகவுமே போராடினர் என்கின்ற உண்மை சோற்றிலே புதைக்கப்பட்ட பூசணிக்காய் போலுள்ளதோடு, தவறான தகவல்களைக் பகிரமுற்பட்டிருக்கின்றமை வலியானதே.
படத்தின் பிரதான கதாநாயகனாக மிளிர்கிறது ஒளிப்பதிவு. யாழ்ப்பாணத்தினை காட்டிய விதம் படம் முழுவதிலும் இயற்கையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது. இதனால் படம் என்ற உணர்வை தாண்டி நிற்பதுடன் மனதையும் கனக்கச்செய்கிறது. .
அத்துடன் ஊசியால் குத்தி இரத்தத்தினால் பொட்டு வைத்து விதவைக்கு வாழ்வளிக்கும் காட்சி என தமிழர்களின் என வீரத்தையும் உணர்வுகளையும் ஒரு சிங்கள இயக்குனராக இருந்தும் அவற்றை கையாண்டுள்ள விதம் வரவேற்கத்தக்கது.
இவன் பாத்திரம் தனது இயல்பான நடிப்பை ஒரளவே வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை இவனைப் போன்ற உடற் தோற்றமுள்ள இயக்கதிலிருந்த பொறுப்பாளர்கள் பலர் இறந்துவிட்டனர். அல்லது இன்னும் வெளியில் அறியப்படாது சிறையிலிருக்கின்றனர். அல்லது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். மேலும் இவனது தோற்றம் தமிழ் ஆணினது தோற்றமாக இல்லை. குறிப்பாக புனர்வாழ்விலிருந்து வந்தவன் போலவும் தோன்றவில்லை. சிறையில் அவன் அனுபவித்த சித்திரைவதைகள் பற்றிய சிறு குறியீட்டு அம்சங்கள் கூட திரைப்படத்தில் இல்லை. அவன் முதல் முதலாக வீட்டுக்கு வருகின்றபோது வழமையாக ஒப்பாரிகளுடன் தான் ஆக்க்குறைந்த்து அழுகையுடன்தான் தாய்மார் வரவேற்பார்கள். தனது காதலியிடம் தானடைந்த வேதனைகளை ஒருபோதும் குறிப்பிடுவதாக காட்டவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம்?
“இனி அவன்” “இனியவன்” என்று இத்திரைப்படத்தின் தலைப்பு இரண்டு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது. பதின்மவயதில் அனைத்தையும் துறந்து விடுதலைப்புலி இயக்கத்துடன் தன்னை இணைத்து, தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடச்சென்ற இளைஞன் ஒருவன், இருபத்தைந்து வருடங்களின் பின்னர், போராட்டம் தோல்வியடைந்த நிலையில் இலங்கை அரசினால் புனர்வாழ்வு கொடுக்கப்பட்டு, மீண்டும் தனது வாழ்வை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கும் ஆசையுடன் தன் சொந்தக் கிராமம் நோக்கித் திரும்புகின்றான். அவனை முதலில் வரவேற்பதை விடுத்து ஊர் மக்கள் முகம் சுழிப்பதும், சுவரில் அவன் படம் மாலையுடன் தொங்குவதும், மாலையுடன் மாவீர்ரான வீரர்களை நம்புவதும் திருப்பம்.

தாயையும், அவனது மனைவியையும் தவிர யாரும் மறுவாழ்விற்காய் ஏங்கும் அவனது உணர்வைப் புரிந்து கொள்ள மறுப்பது வலியானதே.
இயக்குனர் உரையாடல்களைத் தவிர்த்து, குறியீடாய் திரைமொழியை நகர்த்தியமை, இந்தியத்திரைப்பட ஜனரஞ்சகத் திரைக்கதைக்கு பரிட்சயமாகிப் போன தமிழ்ப் பார்வையாளர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.
தமிழனை வைத்துப் பிழைக்கும் நிலை மாறவேண்டும். சிலவற்றை மறக்க நினைக்கும் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதை சிலர் கைவிடல் வேண்டும்.
ஆக மொத்தத்தில் இனி அவன் இனியவனா? என்ற வினாவையே தொடுக்கின்றது.....