சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக பதிவிடாமல் கிடந்த “ப்ளொக்கர்”
இன்று இடப்படும் இப் பதிவோடு மீண்டும் என்னை உங்களை இணைக்கின்றது.
ஜெனிவாவிற்குப் பிறகு அதிகளவு பேசப்படும் விடயமாக மேல் மாகாண
சபைத் தேர்தல் மாறியுள்ளது. அதனாலே அரசியல் பதிவொன்று போடலாம் என்று மிஸ்டர் மனம் சொல்கின்றார்.
ஆனால் மிஸ்டர் மூளை இம் முடிவு குறித்து பரிசீலித்தாலும் உறுதியான தீர்மானத்திற்கு
வரவில்லை.
“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பது போல ஜெனீவாவை
வைத்து வாக்கு வேட்டை போட முன்னர் நிச்சயிக்கப்பட்ட நாள் இந்த மார்ச் 29.
குறிப்பாக வடக்கு கிழக்கு மலையகத்தை அடுத்து தமிழர் பெரும்பானமையாக
வாழும் மேல் மாகாணத்தில் இடம்பெறும் மாகாண சபை தேர்தல் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது.
தமிழர்கள் தங்கள் பெரும்பான்மையினை அதுவும் அறுதிப் பெரும்பானமையாக
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நிரூபித்ததற்கு பிற்பாடு தமிழர்களின் ஒற்றுமையினை நிலைநிறுத்திக்
காட்ட வேண்டிய தேர்தலாக இம் மேல் மாகாண சபைத் தேர்தல் அமைகின்றது.
அதிலும் குறிப்பாக தமிழர்கள் தங்களுக்குரியவர்களை தேர்வு செய்ய
வேண்டிய தேவை எழுந்துள்ளது.
மேல் மாகாணத்திலே தனித்தமிழ் கட்சியாக இல்லா விட்டாலும் மனோ
கணேசனின் ஜனநாயக் மக்கள் முன்னணி தான் பெரும்பாலான மனச்சாட்சியுள்ள தமிழர்களினதும்
ஏன் குறித்த பங்கு பெரும்பானமையினரதும் தெரிவாக உள்ளது.

தலைநகரில் வாழும் தமிழ் மக்கள் ஜனநாயக மக்கள் முன்னணிக்கான ஆதரவை
வழங்குமாறு வடக்கு கிழக்கில் பெரும்பாலான மக்களின் தேர்வாக இருக்க கூடிய தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இது சம்பந்தமானவருக்குத் தான் வெளிச்சம். என்ன
தான் இருந்தாலும் மனோகணேசன் தன் கட்சிக் காரர்களுடன் சேர்ந்து வட மாகாண சபையின் பெரும்பாலான
தேர்தல் மேடைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரச்சாரம் செய்தவர். இதற்கு பிரதியுபகாரமாக
வடக்கு வாழ் மக்கள் கொழும்பு வாழ் உறவுகளுக்கு நல்ல செய்தியைச் சொல்லித் தான் ஆகவேண்டும்.
சிறையில் சிறுபான்மைனர் சித்திரவதைக்குட்படும் போதும், குடாநாட்டில்
நிலப்பறிப்பிற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் போதும் ஏனைய மனிதாபிமானத்திற்கெதிரான
செயல்கள் அரங்கேறும் போதும் அங்கே நீதிக்காய் மனிதாபிமானத்திற்காய் நேரில் நின்று குரல்
கொடுக்கும் மனோ கணேசன் தன் பலத்தை விஸ்தரிக்கும் நோக்கோடு கடந்த பாராளுமன்றத்தேர்தலில்
சொந்தத் தம்பியை கொழும்பில் களமிறக்கி வெற்றி பெறச் செய்து கண்டியில் தான் போட்டியிட்டு
பாராளுமன்ற ஆசனத்தை இழந்தாலும் தலைநகரில் தனது தம்பியின் வெற்றி இவருக்கு அதிகளவில்
ஆதரவு தந்திருக்கவில்லை.
ஏறிய ஏணியையே எட்டி விழுத்திய போது தான் அரசியல் இவ்வளவுக்கு
இவ்வளவு ஆழமானது என்பது தெரிந்திருக்கலாம்.
ஆனால் மனிதாபிமானத்திற்காய் குரல் கொடுப்பதற்காய், சிறுபான்மையினருக்கு
இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காய், மக்களோடு மக்களாய் மக்கள்
பிரச்சனைகளை தீக்க முயற்சிப்பவர் என்பதற்காய் மனோகணேசனை ஆதரிப்பதில் நியாயம் இருக்கின்றது.

எனவே தான் இம் முறை இழந்ததை மீட்கும் முடிவோடு தலைமை வேட்பாளராக
மனோ களமிறங்கியிருக்கின்றார்.
வட புலத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து பெரும் அலையாக வாக்களித்தது
போல் தலைநகர் வாழ் மக்களில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கும் பட்சத்தில்
30ம் திகதி விடிகின்ற போது நல்ல சேதி நமக்கு கிடைக்கும்.
என்ன தான் இருந்தாலும் வீட்டில் முடங்கியோ வாக்களிக்காமல் விடுவதாலேயே
ஏதும் ஏற்பட்டு விடப்போவதில்லை. யார் வரவேண்டும் என்பதன்றி யார் வரக்கூடாதென்று எதிர்பார்த்தோமோ
அவர் ஆட்சிக்கதிரையினை இழுக்கும் போது தான் வாக்களிக்காததன் அருமை புரியும்.
எனவே வாக்களியுங்கள்; உரிமைகளை சரியாகப் பயன்படுத்துங்கள்.
தலைநகரில் வாக்குரிமை இருந்திருந்தால் என் முதற் தெரிவு ஏணிச்
சின்னமும் அண்ணன் மனோகணேசனின் இலக்கம் 1 க இருந்திருக்கும்.